உணவில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியம்!


நாம் நமக்காக செய்யும் விடயங்கள் இரண்டே தான். ஒன்று உண்ணுவது மற்றது உடுத்துவது. அதில் மனிதனது உழைப்பு தொடங்கியதே உணவுக்காக தான். உணவு என்பது அடிப்படை தேவை. உணவில்லாமல் நாம் இல்லை.

ஆனால் இன்று உணவில் தான் நாம் அலட்சியங்களை காட்டி, உடலுக்கு உண்ணாமல், நாவுக்கும் வயிற்றுக்கும் மட்டும் உண்டு வருகிறோம். அதன் பலன் இன்று வீட்டுக்கு வீடு நீரிழிவு. பார்க்கும் இடமெல்லாம் புற்று நோயாளர்கள். குழந்தைகள் உட்பட ஏராளமானவர்கள் உடல் பருமனோடு அல்லல் படுகின்றனர்.

பிரச்சினை வெளியில் இருந்து வரவில்லை. நாம் உள்ளே தள்ளுவது சரியாக இல்லை. இன்று உணவு என்பது கடை நிலைக்கு போய் பணம் முன்னிலைக்கு வந்து விட்டது. அதன் காரணமாக நாம் கண்டதையும் உண்கிறோம். கண்டவாறும் உண்கிறோம்.

சமையல் என்பது இன்று சமையலாக இல்லை. வெறும் ஒப்பேத்தலாக மாறி விட்டது. வீடுகளில் தயாரிக்கப்படும் உணவில் கூட ஆரோக்கியமில்லை.
பல நாட்கள் குளிரூட்டியில் வைத்து சூடாக்கி சூடாக்கி உண்கிறோம். இதனை உண்ணும் குழந்தைகள் சரியான வளர்ச்சியில் இல்லை. வீட்டுக்கு வீடு நோயாளிகள். இப்படி கண்டதையும் கொட்ட நம் வயிறு ஒன்றும் குப்பை தொட்டியல்ல.

இந்நிலை மாற வேண்டும். மனிதனுக்கு மட்டுமே பகுத்தறிவு உள்ளது. எதனை உண்பது எவ்வாறு உண்பது என்பதை நாம் பகுத்தறிந்து உண்ண வேண்டும்.
நம் ஆரோக்கியத்தை அடகு வைத்து ஆடம்பரமாக வாழ்வது என்பது மிக அறிவீனமாகும்.

நேரமின்மையை காரணம் காட்டி உணவை அலட்சியப்படுத்துவது நமக்கு நாமே குழி தோண்டும் செயலை ஒத்தது. ஆகவே உணவை முதன்மை படுத்துவோம்.

குளிரூட்டியில் உணவை வைத்து உண்பதை முதலில் நிறுத்துவோம். இதனால் உடலில் அமில தன்மை கூடி வாதம் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும். இட்லி, தோசை மாவுகளை முடிந்தவரை அன்றன்று அரைத்து பாவிக்க முனைய வேண்டும். இதனால் உணவையும் நாம் தினமும் மாற்றி அமைக்கலாம்.

கடை உணவுகளையும், தயார் உணவுகளையும் அறவே தவிர்த்து விட வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் (மைதா மா, வெள்ளை அரிசி, வெள்ளை சீனி, தாவர எண்ணெய்கள், தூள் உப்பு) அனைத்தையும் தவிர்த்து விட வேண்டும் .

ஹோர்மோன் பாதிப்புள்ள பால் உணவுகள் மற்றும் இறைச்சிககளையும் தவிர்த்து விடுவது நல்லது.

நாட்டு பழங்கள், மரக்கறிகள் எங்கு கண்டாலும் பேரம் பேசாமல் வாங்கி கொள்ளுவோம்.

சாம்பார், சாதம் என்றாலும் வீட்டிலேயே அன்றன்று சமைத்து உண்ணலே சாலச் சிறந்தது.

விதைப்பதை தான் அறுவடை செய்ய வேண்டும். தரமில்லாத விதைகளால் தரமான விளைச்சலை பெற முடியாது. உணவே மருந்து என்பதை மனதில் இருத்திக் கொண்டால் மருந்தை தேடி அல்லல் படவும் தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *