2003ம் ஆண்டில் சார்ஸ் தொற்று பரவியபோதே இந்தக் கிருமி மீண்டும் வரும் என்பது தெரியுமாம்!

நோம் சாம்ஸ்கி என்ற பெயர் அறிவித்துறையில் மிகவும் பிரபலம். கடந்த அரை நூற்றாண்டுகளாக அமெரிக்க அரசியல் புலத்தில் இடதுசாரிகளின் தரப்பாக துணிச்சலுடன் கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். முதலாளித்துவ சிந்தனையாளர்களின் சொர்க்கம் என்று கருதப்படும் அமெரிக்காவில் இருந்துகொண்டு அதற்கு எதிராகப் பேசுவது என்பது சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பதற்கு இணையானது. அதைத்தான் அச்சமின்றி செய்துகொண்டிருக்கிறார் சாம்ஸ்கி.
சமீபத்தில் இந்த கொரோனா பெருந்தொற்று குறித்து அவர் கூறியிருக்கும் கருத்துகளும் அதிரடி சரவெடி ரகம்தான். வழக்கம் போல் அமெரிக்க அரசையும் ட்ரம்ப்பையும் ஒரு பிடிபிடித்திருக்கிறார்.இந்த கொரோனா பெருந்தொற்று என்பதே அமெரிக்காவின் நவீன ஜனநாயக அமைப்பின் மாபெரும் தோல்வி என்று வர்ணிக்கிறார் சாம்ஸ்கி.

நன்கு கவனியுங்கள். பெருந்தொற்றை எதிர்கொள்வதில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போதாமை அல்லது சரிவுகளை மட்டுமே அவர் விமர்சிக்கவில்லை. மாறாக, இந்தப் பெருந்தொற்றின் உருவாக்கம் அல்லது பரவலையே அவர் ஜனநாயகத்தின் மற்றும் நவீன முதலாளித்துவ அரசுகளின் தோல்வி என்கிறார்.
குறிப்பாக, அமெரிக்காவின் தோல்வி என்கிறார்.பெருந்தொற்று உருவானது அல்லது பரவியது எப்படி அமெரிக்காவின் தோல்வியாகும் என்று கேட்டால் 2003ம் ஆண்டில் சார்ஸ் என்ற தொற்று பரவியபோதே இந்தக் கிருமி மீண்டும் பரிணாம வளர்ச்சி பெற்று திரும்ப வரும் என்பது மருத்துவ உலகத்துக்கும் மருந்துக் கம்பெனிகளுக்கும் நன்கு தெரியும் என்கிறார்.

பொதுவாக, தடுப்பூசிகள் மற்றும் தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் தயாரிக்கும்போது, கிருமிகளின் பரிணாம வளர்ச்சியை கவனித்து அதற்கேற்ப மருந்துகள் தயாரிப்பதே வழக்கம். உதாரணமாக, 1970களில் போடப்பட்ட அதே அம்மை தடுப்பூசி அல்ல இப்போது போடப்படுவது. இப்போது அதன் அப்டேட் வெர்ஷனான தடுப்பூசிதான் போடப்படுகிறது.
ஏனெனில், ஒவ்வொரு தடுப்பூசிக்கும் எதிராக போராடும் ஆற்றலை அந்த நுண்ணுயிரியின் உடலும் பெற்றுக்கொண்டு தொடர்ந்து தன்னை தகவமைத்தபடியே இருக்கிறது. இதுதான் இயற்கையின் விதி. இப்படித்தான் சார்ஸ் என்ற கிருமியும் பரிணாமம் பெற்று கோவிட் 19 என்ற கொரோனாவாக வளர்ச்சியடைந்துள்ளது. இதை மருந்து கம்பெனிகள் நினைத்திருந்தால் அப்போதே தடுப்பூசி உருவாக்கி எதிர்கொண்டிருக்க முடியும். ஆனால், அப்போது அதைச் செய்யாமல் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக இப்போது போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்
கிறார் சாம்ஸ்கி.

சரி ஏன் இதை மருந்து கம்பெனிகள் செய்யவில்லை… அரசாவது இதை வலியுறுத்தியிருக்கலாமே? இந்த கேள்விக்கான பதிலில்தான் சாம்ஸ்கியின்
குற்றச்சாட்டு உள்ளது.அமெரிக்க மருந்து கம்பெனிகளுக்கு சார்ஸ் பற்றியும் இதன் எதிர்காலம் பற்றியும் நன்கு தெரிந்திருக்கும். ஆனாலும் ஏன் அசட்டையாக இருந்தார்கள்? ஏனெனில் அதில்தான் அவர்களுக்கு வருமானம் உள்ளது என்கிறார் சாம்ஸ்கி.
நமது மருந்து நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளை வாரிக் குவித்து சூப்பர் மில்லியனர்களாக இருக்கிறார்கள். நம்முடைய நோய் அவர்கள் மூலதனம். அதனை தக்க வைப்பதற்காக எதையும் செய்வார்கள் என்னும்போது, ஓர் உண்மையைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பதில் அவர்களுக்கு என்ன கஷ்டம் என்று கேட்கிறார் சாம்ஸ்கி. பல லட்சம் கோடி வருமானம் ஒன்று எதிர் காலத்தில் தெரிந்தால் யார்தான் இதனை கண்டுகொள்வார்கள் என்கிறார்.

சரி, அரசுகள் இதனை செய்யலாமே..? மருந்து கம்பெனிகள்தான் லாப வெறியில் நடந்துகொள்கின்றன. அரசாவது மக்கள் நலனை யோசிக்கலாமே? அதற்கு வாய்ப்பில்லை என்பதே சாம்ஸ்கியின் பதில். நவீன் முதலாளித்துவ ஜனநாயக அரசுகள் மாபெரும் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளாக மாறி பல வருடங்களாகிவிட்டன. தேர்தல் முதலான எல்லா ஜனநாயக நடைமுறைகளுக்கும் இந்த அரசியல் கட்சிகளுக்கும் அரசுக்குமே கூட படியளப்பது இந்த கார்ப்பரேட்டுகள்தான் என்னும் போது அரசு இவர்களின் நலனுக்கும் விருப்பத்துக்கும் எதிராக நடப்பது என்பது முடியவே முடியாத காரியம்
என்கிறார் சாம்ஸ்கி.
இன்று ஒட்டுமொத்த அமெரிக்க அரசை இயக்கிக் கொண்டிருப்பதும் இவர்கள்தான். இவர்கள் அரசோடு வைத்திருக்கும் கூட்டு ஆபத்தானது. இங்கு நடக்கும் எல்லா குளறுபடிகளுக்கும் இவர்களே காரணம். ஆனால், ஒவ்வொரு பிரச்னையின் போதும் யாராவது ஒருவரை குற்றவாளியாக்குவார்கள். தங்களைத் தவிர ஒவ்வொருவர் மீதும் குற்றங்களைச் சுமத்த வெட்கப்படவே மாட்டார்கள்.

இதோ இப்போதுகூட சீனாவை குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள். ட்ரம்பும் இவர்களுடன் சேர்ந்துகொண்டு கூவுகிறார். வூஹான் வைரஸ், வூஹான் வைரஸ் என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்வதன் மூலம் இந்தப் பாவத்தில் தங்களுக்குப் பங்கில்லை என்பதைப் போன்ற சித்திரத்தை உருவாக்க முயல்கிறார்கள் அமெரிக்க காப்பரேட்களும் அரசுத்தரப்பும்.
ஆனால், இதில் உண்மையில்லை. நிஜமான குற்றவாளிகள் இவர்களே என்று விளாசுகிறார் சாம்ஸ்கி.கடந்த பிப்ரவரியில் கொரோனா உலகம் முழுதும் தனது கோரதாண்டவத்தை தொடங்கிய பின் அமெரிக்காவுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அதிபர் ட்ரம்ப். அதில், நோய் கட்டுப்பாட்டு மையங்கள், சுகாதார மையங்கள் ஆகியவற்றுக்கான நிதியை வழக்கத்தை விடக் குறைத்து அறிவிக்கிறார். மறுபுறம் சுற்றுச் சூழலை சீரழிக்கும் பாசில் எண்ணெய் நிறுவனங்களுக்கான மானியத்தை உயர்த்தியும் ராணுவத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்தியும் அறிவிக்கிறார்.

இந்த அறிவிப்புகளே ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அரசியல் கட்சிகள், அமெரிக்க அரசு ஆகியவை யாருக்கான ஆட்கள் எனச் சொல்லாமல் சொல்கிறது.
சுற்றுச் சூழல் சீரழிந்தாலும் அதனால் மக்கள் நோய்வாய்ப்பட்டாலும் கவலையில்லை. எங்களுக்கு மண்ணுக்குக் கீழே உள்ள எண்ணெயும், பாதரசமும் அதன் மூலம் கிடைக்கும் பல லட்சம் கோடி வருமானமுமே முக்கியம் என நினைக்கும் தீய சிந்தனைக்குத்தான் இந்த காரியக்கார கோமாளிகள் வாள் பிடிக்கிறார்கள் என்கிறார் சாம்ஸ்கி.
உலகம் முழுதும் எல்லா இடதுசாரிகளும் சொல்வதைத்தான் சாம்ஸ்கியும் சொல்கிறார். ஆனால், அதில் உள்ள உள்ளார்ந்த மெய்மை ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அது, இந்த நவீன ஜனநாயக ஏற்பாட்டில் உருவாகியிருக்கும் மாபெரும் ஓட்டை. ஜனநாயகம் என்பதே மக்கள் மையமானது என்கிற கருத்தியலிலேயே ஏற்பட்டிருக்கும் இந்த ஓட்டை ஆரோக்கியமான சிவில் சமூகத்தில் உருவாகியிருக்கும் புற்றுக்கட்டி.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இன்று பொருளாதார அந்தஸ்த்தைக் கடந்து பெரிய வித்தியாசங்கள் இல்லை. சாம்ஸ்கி அமெரிக்காவை மையப்படுத்திச் சொல்லியிருக்கும் விஷயங்கள் அனைத்துமே இந்தியாவுக்கும் பொருந்தும் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அமெரிக்கா போன்ற கல்வியறிவும் சிவில் முதிர்ச்சியும் கொண்ட நாடுகளிலேயே இவ்வளவு மோசமான ஜனநாயக சூழல் என்றால் படிப்பறிவற்ற நம் நாட்டின் நிலையைக்
கேட்கவே வேண்டாம்.
கொரோனா போன்ற அசாதாரணமான சூழல் ஒன்றை மனித நேயத்துடன் எதிர்கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. இன்றைய தேவை மனிதம். செல்வத்தைவிடவும் வேறு எதைவிடவும் அது மிகப் பெரியது. எளிய மனிதர்களுக்குத் தெரிந்திருக்கும் இது, அரசுகளுக்கும் மெத்தப் படித்தவர்களுக்கும் தெரியாததுதான் நம் காலத்தின் அவலம்.

இளங்கோ கிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *