உலகெங்கிலும் ஆண்டுக்கு 9 கோடியே 60 லட்சம் பேர் டெங்கு நோயால் பாதிப்பு!

கொரோனாவுக்கு எதிராக உலகமே போராடி வரும் நிலையில், டெங்கு மற்றும் மலேரியா மீதும் உலக நாடுகள் கவனம் செலுத்த  வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் (WHO), மருத்துவ இதழான ‘லான்செட்’டும் எச்சரித்துள்ளன. காரணம், டெங்கு மற்றும் மலேரியா அபாயம்  இன்னமும் நீடிக்கிறது.
அதனால்தான் ‘‘கொரோனா காலத்திலும் மலேரியா தடுப்பு, நோயறிதல் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளைக் குறைத்துவிட வேண்டாம்…’’ என்று மார்ச் 25ம் தேதி, உலக சுகாதார அமைப்பின் குளோபல் மலேரியா திட்ட இயக்குனர் பேட்ரோ அலோன்சோ தெரிவித்துள்ளார்.
உலகளவில் மலேரியாவால் பாதுப்புக்குள்ளாகும் 11 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தமிழகத்தில் 2020ம் ஆண்டுக்குள் யானைக்கால் மற்றும் 2022க்குள் மலேரியா நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று கடந்த காலங்களில் தமிழக சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுதும் பரவியபோது மாநில அரசு தமிழகத்தில் அக்காய்ச்சல் பெரிய அளவில் பரவவில்லை என்று மறுத்தது. ஆனால், எதிர்க்கட்சிகளோ, ‘டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கூட தமிழக அரசு உண்மையாகப் பதிவு செய்யாமல் மர்மக் காய்ச்சல் என்று சொல்லி டெங்குவே இல்லை என்று காட்ட முயல்கிறார்கள்…’ என்று குற்றம் சாட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளில் மலேரியா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கம்போடியா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாமில் யானைக்கால் நோயே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இவ்வகை நோய்கள் இன்னும் ஒழிக்கப்படவில்லை.  
இதற்கிடையில் கொசுக்கள், உண்ணிகள் போன்ற பூச்சிகள் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் உலகெங்கும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் 2017ம் ஆண்டில், 8,42,095 பேர் மலேரியா நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 1,57,996 பேர் டெங்குவினாலும், 63,679 பேர் சிக்குன் குனியா நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகெங்கிலும் ஆண்டுக்கு 9 கோடியே 60 லட்சம் பேர் டெங்கு நோயால் பாதிக்கப்படுவதாகவும், 2017ல் உலகளவில் 4,35,000 பேர் மலேரியாவால் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.நோய் பரப்பிகள் மூலம் பரவும் 12 முக்கியமான நோய்களால் உலக மக்கள் தொகையில் 80% பேர் பாதிக்கப்படுவதாகவும், உலகெங்கும் வருடத்துக்கு 7 லட்சம் பேர் இந்த நோய்களால் பலியாவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய மக்கள் தொகையில் 95% பேர், மலேரியா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் சூழலில் உள்ளனர். நமது சுகாதார அமைப்புகள் இப்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமே மும்முரமாக இருப்பதால், மலேரியா தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரசாரங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் நம் நாட்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மருந்து தெளித்தல், விழிப்புணர்வு பிரசாரங்கள் போன்ற மலேரியா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.‘‘மலேரியாவின் உச்ச காலம் மே மாதம் முதல் தொடங்குகிறது; ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மழைக் காலத்துக்குப் பிறகு இதில் சீரான வேகம்  காணப்படுகிறது…’’ என்று சண்டிகரை சேர்ந்த முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (பிஜிஐஎம்ஆர்) சமூக மருத்துவம் மற்றும் பொது சுகாதாரப்பிரிவை சேர்ந்த மது குப்தா கூறியுள்ளார்.
‘‘இந்த மாதங்களில் மலேரியாவினை தடுக்க, மார்ச், ஏப்ரல் மாதங்களில் தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரசாரங்கள் தொடங்குகின்றன. கொரோனாவை நோக்கி மட்டுமே நமது வளங்களும், கவனமும் செலுத்தப்படுவதால் மலேரியா தடுப்பில் பின்னடைவு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது; அது நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், மலேரியா பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும் மிகவும் முக்கியமானவை…” என்கிறார் அவர்.

இந்தியா போன்ற மலேரியா பாதிப்புக்குள்ளான நாடுகளை எச்சரிக்கும் ‘லான்சென்ட்’ இதழ், ‘‘2014 – 2016ம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலோ வைரஸ் பரவி 9,428 உயிர்களைக் காவு வாங்கியது. அதேநேரம் மலேரியாவினால் ஏற்பட்ட இறப்பு கிட்டத்தட்ட 900% உயர்ந்திருந்தது…’’ என்ற புள்ளிவிபரத்தை இப்போது நினைவுப்படுத்தி எச்சரிக்கிறது.
கொரோனா மற்றும் மலேரியாவின் அறிகுறிகளில் உள்ள ஒற்றுமையையும், இந்த எச்சரிக்கையானது விளக்குகிறது. ‘‘காய்ச்சல், தசைவலி, சோர்வு உள்ளிட்ட கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகள் மலேரியாவுக்கும் இருப்பதால் ஆரம்பக்கால நோயறிதலில் மருத்துவர்களுக்கு இந்த அறிகுறிகள் சவாலாக இருக்கும்…’’ என்கிறது ‘லான்செட்’.
இதை ஆமோதிக்கும் வகையில் “கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சுகாதார இயந்திரங்களின் செறிவு, மலேரியாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு ஒரு சவாலாக இருக்கும்…” என்று பூனேவைச் சேர்ந்த உலகளாவிய சுகாதாரம், உயிர்வேதியியல் மற்றும் சுகாதாரக் கொள்கை தொடர்பான ஆராய்ச்சியாளர் ஆனந்த் பாண் கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின், உலக மலேரியா அறிக்கை 2019ன் படி, ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட  பத்தொன்பது நாடுகள் உலகளாவிய மலேரியா சுமையில் கிட்டத்தட்ட 85%ஐ கொண்டுள்ளன.

இப்போது, உலகளாவிய மலேரியா நோயாளிகளில் 3% பேர் இந்தியாவில் உள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. “நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மக்களை வீட்டுக்குள் முடங்கி வைத்துள்ளது. இதனால், மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரமும் தடைப்பட்டுள்ளது.
மக்களின் கவனத்தை மலேரியா மீது செலுத்தவில்லை என்றால், அது நிலைமையை மோசமாக்கும். டெங்கு, சிக்குன்குனியா போன்ற தண்ணீரின் மூலம் பரவும் நோய்கள் பற்றிய பிரசாரத்தையும் இந்தியர்கள் கைவிடக் கூடாது…’’ என அழுத்தம்திருத்தமாக சொல்கிறார்கள்.
‘‘கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள், மலேரியாவுக்கு மட்டுமல்ல, காசநோய், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கும் பொருந்தும்.
எடுத்துக்காட்டாக துப்பரவு, நோய் கட்டுப்பாடு, மருந்து தெளித்தல் ஆகிய பணிகளுக்கு அனைத்து நகராட்சி ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டு மாதங்களுக்கு கொரோனாவால் பதிக்கப்பட்டவர்களை மட்டுமே தொடர்பு கொள்கின்றனர். இதனால் மற்ற வழக்கமான பணிகளை அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை. அவற்றை யார் செய்வார்கள்? நம்மிடம் பேக் அப் வசதி இல்லை.
எனவே, இத்தகைய வழக்கமான பணித்திட்ட செயல்பாடுகள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்வது இன்றியமையாதது…’’ என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *