இலங்கையில் வாழும் முஸ்லிம்களை ஏன் சோனகர்கள் என்று அழைக்கிறார்கள்?

இலங்கை வாழ் முஸ்லிம்கள்  சோனகர்கள் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றனர். இலங்கைவாழ் முஸ்லிம்களை வரலாற்று ரீதியாக நோக்கும் போது இரு வகையான விளக்கங்கள் கொடுக்கப் படுகின்றது.

1. இலங்கை முஸ்லிம்கள் அரபியர்களின் வழித்தோன்றல்கள். அரபியர்கள் ஆரம்ப காலம் தொட்டு இலங்கையுடன் வர்த்தக தொடர்புகளை பேணி வந்தார்.  அரபுலகில் இஸ்லாம்  அறிமுகமான பொழுது இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்பட்டது. அரேபியர்கள் இலங்கையில் உள்ள சிங்கள,  தமிழ் பெண்களை திருமணம் செய்துதான் இந்த நாட்டில் முஸ்லிம்களும் இஸ்லாமும் குடி கொண்டது என்று கூறுகின்றனர்.

2.  இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள். அவர்களின் தாய்மொழி தமிழே. ஆதலால் அவர்கள் தமிழர்கள். மதத்தால் இஸ்லாமியர்கள் என்பது மற்றொரு கருத்து.

உண்மையில் இலங்கையில் வாழ்கின்ற பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூட இதனையே தமது வரலாறாக கருதுகின்றனர்.

முஸ்லிம்கள் என்போர்  இந்த நாட்டுக்கு வந்தவர்கள். இந்த நாடு பௌத்த நாடு. முஸ்லிம்களாகிய நாம் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள். ஆகவே எப்பொழுதும் நாம் அடங்கித்தான் போக வேண்டும், குட்டக்குட்ட குனியதான் வேண்டும், நிமிர்ந்துகூட பார்ப்பதை மகா குற்றமாக பார்க்கும் முஸ்லிம்களும் எம் மத்தியிலும் இல்லாமல் இல்லை.

உண்மையில் இந்த இலங்கை முஸ்லிம்கள் யார்?
அவர்களின் உண்மை வரலாறு என்ன? என்பதன் ஆரம்ப வரிகளாக இவ் ஆக்கம் அமையப் பெற்றிருக்கும்.

இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் சோனகர்கள், மோர் சமூகம் என அழைக்கப்படுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் அரபியர்களின் வழித்தோன்றலாக அல்லது இனத்தால் தமிழர்களாக இருந்தால் இவர்களுக்கு சோனகர்கள் என்ற சொற்பிரயோகம் எவ்வாறு வந்தது என்ற கேள்வி எழுகின்றது. சோனகர் என்ற சொல் வரலாற்றில் அரேபியாவில் இஸ்லாம் வருவதற்கு முன்னால் இருந்தே புழக்கத்தில் இருப்பதை வரலாற்றை ஆய்வு செய்யும்போது கண்டு கொள்ளலாம். ஆகவே சோனகர்கள் என்பது இந்த நாட்டின் ஒரு பூர்வீக இனமாக வாழ்ந்து உள்ளார்கள். சோனகர்கள் என்பவர்கள் இந்து சமுத்திரத்தின் மிகப் பழங்குடி மக்கள். மனித குலத்தின் வரலாறு துவங்கியபோதே சோனகர்கள் என்று செற்பிரயோகமும் இந்த மண்ணில் தோன்றியுள்ளது.
உலக மக்களால் நம்பப்படுகின்ற முதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் இறக்கப்பட்டது இலங்கையில் தான் என்று, ஸ்ரீ பாத மலை இன்றும் மதம்,இனம், மொழிகளுக்கு அப்பால் மக்கள்  அனைவராலும் தரிசித்து வருவது மனித குலத்தின் ஆரம்பம்  இங்கிருந்துதான் ஊற்றெடுக்கின்றது என்ற செய்தியை குறித்து நிற்கின்றது. ஆகவே முதல் மனிதன் இந்த பூமியில் தோன்றிய பொழுதே மனித சமூகத்தின் வரலாறும் அவர்களின் முதல் மொழியும் பதிவு செய்யப்படுகின்றது. மனித சமூகம் முதல் முதலில் பேசிய மொழி எது என்ற கேள்வி எமக்கு முன்னால் எழுகின்றது. ஆதம் என்ற சொல் அரபுச் சொல்ல்ல. ஆகவே முதல் மனிதன்  இப்பூமியில் அரபியாக, அரபி மொழி பேசுகின்ற வராக இருந்திருக்க முடியாது. ஆதம் என்பவர் ஒரு  அஜமியாக,  அரபி அல்லாதவராகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அப்படியானால் அவர் பேசிய மொழி என்ன?

மொழி இயல் ஆராய்ச்சியாளர்களான பாவாணர் மற்றும் ஜராவாதம் என்போர் உலகில் மூத்த மொழி எது என்பது தொடர்பாக 35 ஆண்டுகால ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள். இவர்களின் ஆய்வின் முடிவில் பல புதிய தகவல்களை கண்டுகொள்ள முடிகின்றது.  இவர்களின் ஆய்வில் தமிழுக்கு முந்திய ஒரு மொழி இருந்ததாக குறிப்பிடுகின்றார்கள். அந்த மொழி வினையெச்சம், வினைத்தொகை கொண்டது, முற்றுப் பெற்ற வாக்கியங்களாகவும் இருக்கவில்லை என்று குறிப்பிடுகின்றார்கள். இதனை “பண்டைய தமிழ் சமூகத்தில் நாடகம்” என்ற நூலில் கலாநிதி கா சிவத்தம்பி அவர்கள் “அந்த மொழி தென்னிலங்கையில் முஸ்லிம்களிடத்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது” என்று கூறுகின்றார்.

கலாநிதி கா சிவத்தம்பி அவர்களின் ஆய்வு பல விடயங்களை தெளிவுபடுத்துகின்றது.  அதாவது தமிழ் மொழிக்கு முந்திய ஒரு மொழி இருந்திருக்கின்றது. அதுவே உலகின் மூத்த மொழியாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த மொழி தென்னிலங்கை  முஸ்லிம்களிடத்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
யார் இந்த தென்னிலங்கை முஸ்லிம்கள்?
இங்கு முஸ்லிம்கள் எனக் குறிப்பிடப்படுகின்றவர்கள் இலங்கைச் சோனகர்கள். ஒரு சமூகம் எப்பொழுதும் தன் தாய் மொழியையே பேசும்.  இலங்கை சோனகர்கள் பேசுகின்ற மொழி உலகின் மூத்த மொழி என்றால் உலகின் மூத்த சமூகம் சோனகர்கள் என்பதே இதன் மூலம் தெளிவாகின்றது. ஆகவே அந்த மொழியை சோனக மொழி என அடையாளப்படுத்தலாம்.
உலகில் தோன்றிய ஏராளமான இனங்களும் மொழிகளும் காலத்தால் அழிந்து போயுள்ளன என்பதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. உலகையே  பிரமிக்க வைத்த மாயர்கள் கூட அழிந்திருப்பது இதற்கு சான்றாகும். ஆகவே உலகில் தோன்றிய முதல் மொழி சோனக மொழி அழிந்திருப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த மொழியின் எச்ச சொச்சங்கள் இன்றும் இலங்கை சோனக சமூகத்தில் புழக்கத்தில் இருப்பதனை காணலாம். 

இலங்கை முஸ்லிம்கள் அரபிகளின் வழித்தோன்றலாக இருந்திருப்பின் தனது தந்தையை அபூ என்றும், தாயை உம்மூ என்றும்,  சகோதரியை உஹ்துன் என்றும், சகோதரனை அஹுன் என்றும் அழைத்திருக்க வேண்டும்.  அல்லது இவர்கள் இனத்தால் தமிழர்கள் என்றால் அப்பா, அம்மா, அக்கா,  அண்ணா என்று அழைத்திருக்க வேண்டும். இவை இரண்டுக்கும் அப்பால் இச் சோனக சமூகம் வாப்பா, உம்மா, தாத்தா, நானா என்ற சொற்பிரயோகங்களை பயன்படுத்துகின்றார்கள்.  இச்சொற்கள் அரபு மொழிக்கு  உரியதுமல்ல. தமிழ் மொழியை சார்ந்ததுமல்ல. அவ்வாறெனில் சோனகர்களுக்கு மத்தியில் கையாளுகின்ற இச்சொற்கள் தனியானதொரு மொழியின் அடையாளங்களாக விளங்குகின்றன. ஆகவே இந்த நாட்டில் வாழ்கின்ற சோனகர்களுக்கு மத்தியில் தனியானதொரு மொழி இருந்திருக்கின்றது என்பதனையும் காலத்தால் அம்மொழி பல மாறுதல்களுக்கும் அழிவுக்கும் உட்பட்டுள்ளது என்பதனையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

இஸ்லாம் அரபு உலகில் தோன்றிய போதும் அதன் கருத்துக்களாலும் நடைமுறைகளும் அதன் பரவலாக்கம்  அரபுலகை தாண்டி வியாபித்தது. இஸ்லாத்தின் அழகிய வாழ்வியலால் கவரப்பட்ட பெருந்தொகையான மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர். இந்நிலை மத்திய கிழக்கை தாண்டி ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா என நீண்டு சென்றது. இவ்வரிசையில் தான் இலங்கையின் பூர்வீக குடிகளான சோனகர்கள் இஸ்லாத்தின் கருத்துக்களால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றனர். பலஸ்தீனத்தில் உதித்த கிறிஸ்தவத்தை ஐரோப்பியர்கள் ஏற்றுக்கொண்டதனால் அவர்கள் எவ்வாறு ஐரோப்பியாவுக்கு அந்நியர்களாக முடியாதோ அதே போன்றுதான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால்  சோனகர்கள் இலங்கைக்குஅன்னியராக முடியாது.  அது அவர்களின் தெரிவுச் சுதந்திரம்.
சோனகர்கள் என்ற பெயர்  இவர்களுக்கு எவ்வாறு வந்தது என்பதனை பார்க்கும்பொழுது  முதல் மனிதன் சுவனத்தில் படைக்கப்பட்டதாகவும் அங்கு நடந்த நிகழ்வுகளால் பூமிக்கு இறக்கப்பட்டதாக இஸ்லாம் உட்பட ஏனைய வேத நூல்களும் குறிப்பிடுகின்றன. முதல் மனிதன் ஆரம்பமாக வசித்த கிராமம் சுவனம் –  அதை சார்ந்தவர்கள் சுவனர்கள். அதுவே காலப்போக்கில் சோனகர்கள் என்று மருவியிருக்கலாம்.  சோனகர் இன வரலாறு, முதல் மனிதன் இறக்கப்பட்டதாக நம்பப்படும் ஸ்ரீபாத மலையிலிருந்து ஆரம்பிக்கின்றது.

ஆகவே சோனகர்கள் என்பவர்கள் இலங்கையின் பூர்வீக குடிகள் என்றும் அவர்களுக்கான மிகப்பழமை வாய்ந்த  மொழி உலகத்தில் இருந்திருக்கின்றது என்பதனையும் பார்த்தோம். சோனக  சமூகம் அரபிகளின்  பரம்பரையால் வந்தவர்களுமல்ல, இனத்தால் தமிழர்களுமல்ல, சோனகம்,  சோனகர்கள் என்பதே தனி இனம் என்பதனையும் பார்த்தோம். இலங்கைச் சோனகர்கள் எவ்வாறு இஸ்லாத்தை ஏற்றார்களோ அதேபோன்று இங்கிருந்த தமிழ் மக்களில் சிலரும் இஸ்லாத்தை  ஏற்றிருக்கிறார்கள். அவர்கள் இனத்தால் தமிழர்களாகவும் மதத்தால் இஸ்லாமியர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். தமிழர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அதேபோன்று சோனகர்களும் இஸ்லாத்தை ஏற்றுள்ளார், அதனால் தமிழர்களும் சோனகர்களும் மதத்தால் ஒற்றுமைப் பட்டுள்ளதால் அவர்களை  இனத்தாலும்  தமிழர்களாக கருத முனைவதனை  ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோன்று வியாபார நோக்கமாய் வந்த அரேபியர்கள் இங்கு வாழ்ந்த சிங்கள, தமிழ், சோனக பெண்களை திருமணம் செய்திருக்கிறார்கள்.  அதன் மூலமாகவும் இஸ்லாம் இங்கு பரவி இருக்கின்றது. ஆகவே சோனகர்கள் என்பவர்கள் தனியான இனம் என்பதனையும் அவர்கள் இஸ்லாத்தை இந்த நாட்டில் ஏற்றுள்ளார்கள் என்பதனையும் அறியலாம்.
இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் சோனகர்கள் தான்  என்பதை நிறுவுவதன் மூலம் நாம் ஏனையவர்களை அன்னியர்களாக பார்க்கவில்லை. நாம் அனைவரும் ஒரு பரம்பரையை சார்ந்தவர்கள். சகோதரத்துவ வாஞ்சை என்றும்  எம்மிடம் மிகைத்து காணப்படுகின்றது. இந்த நாட்டு சிங்களவர்கள், தமிழர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் நாம் சகோதர வாஞ்சையுடனே நோக்குகின்றோம்.
இந்த நாட்டின் நல்லுள்ளம் படைத்த சிங்களவர்களிடம்  நாம் கூறிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். ” இந்த நாட்டின் பூர்வீக குடிகள்  சோனகர்களான  இந்த முஸ்லிம்கள்தான் என்பதனை நீங்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்ற தேவை கிடையாது. இந்த நாடு மட்டும் தான் சிங்களவர்களுக்கு இருக்கின்றது என்று நீங்கள் கூறுவதைப் போல நாங்களும் கூறுகின்றோம் “உலகின் பூர்வீக சோனக சமூகத்திற்கும் இந்த நாடு மட்டும் தான் இருக்கின்றது”.

இலங்கை சோனகர்களுடன் ஒரு நிமிடம்…

நாம் இந்த நாட்டின் பாரம்பரிய தொழிலுக்கு, வியாபாரங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை எமது வரலாற்றை தேடுவதிலும் தொகுப்பதிலும் ஆவணப்படுத்துவதிலும் கொடுக்கவில்லை. இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாக நாமிருந்தாலும் எங்களுடைய வரலாறு மறைக்கப்பட்டு நாம் இந்த நாட்டுக்கு வந்தவர்கள் என்றும்  இந்த நாட்டின் பூர்வீக குடிகள் அல்ல என்றும் எம் மிது பலி சுமத்தி எமக்குள்ள உரிமைகளும் சலுகைகளும் சுதந்திரங்களும் நாளுக்கு நாள் பல விதத்திலும் பரிக்கப்பட்டு மீண்டுமொரு மியன்மார் சமூகமாய் நாம் மாறி விடுவோமா என்ற அவலம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

இத் தருணத்தில் இந்த நாட்டின் பூர்வீக சமூகமான சோனகர்கள் தங்களுடைய வரலாற்றை தொகுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் முன்வர வேண்டும். இதற்காக இலங்கை சோனக சமூகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கு  நிறுவனமயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் அவசியம். தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் எம் இன வரலாறு அளிக்கப்படும் வேலையே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எமது சமூகத்தில் வரலாற்றுத் துறையில் ஆர்வமுள்ள தேர்ச்சி பெற்ற பாண்டித்தியம் கொண்ட ஆளுமைகளை இனங்கண்டு அவர்களுக்கு எங்களுடைய பணம்களை, பொருள்களை,  இடங்களை முதலீடு செய்து வரும் கால எம் சந்ததியருக்கு மிகச் சிறப்பானதொரு வரலாற்றுத் தொகுப்பை கையளிக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.

இலங்கை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மாணவர் ஆய்வு மன்றம் செயற்பட்டு வருகின்றது. இதில் இலங்கைமுஸ்லிம்களின் வரலாற்றை தொகுப்பதற்கு என்று தனிப்பிரிவே இயங்கி வருகின்றது.  இப் பணியை செய்வதில் அவர்களின் தேவைகள் ஏராளமாக உள்ளன. இவர்கள் விடயத்திலும் எமது சமூகத்தின் தனவந்தர்கள், புத்திஜீவிகள்,  இத்துறை சார்ந்தவர்கள் கவனம் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
இறுதியாக “எச்சமூகம் தன் வரலாற்றை அறியவில்லையோ அவர்களுக்கு வருங்காலம் இல்லை” என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

இதற்கு மேலும் எமது வரலாற்றை தொகுப்பதில், தேடுவதில், ஆய்வு செய்வதில் பின் நிற்க முடியாது. ஆகவே எமது சமூகத்தின் தனவந்தர்கள், கல்விமான்கள், இத்துறை சார்ந்தவர்கள், நலன்விரும்பிகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளான சோனக சமூகத்தின் வரலாற்றை தேடுவதிலும் ஆராய்வதிலும் தொகுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக எம் சமூகத்தின் சகல வளங்களும் அர்ப்பணிக்கப்பட வேண்டும்.
இவ்வுயர்ந்த பணியில் உங்கள் பங்களிப்பையும் உறுதிப்படுத்துங்கள். ஆகக் குறைந்தது நீங்கள் செய்யும் ஒரு share இவ்வாக்கத்தின்  நோக்கத்தை அடைய துணை புரியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *