கொழும்பில் இருந்து முதற்கட்டமாக 350 பேர் மலையகம் திரும்பினர்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், அமைச்சரின் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரையின் பேரில் கொழும்பில் உள்ள மலையகத்தைச் சேர்ந்த 350 பேர் முதல் கட்டமாக ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பில் தங்கியிருந்து வேலை செய்துவந்த மலையகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்களை ஊர்களுக்கு அழைத்துவருவதற்கான முயற்சிகளை ஆரம்பம் முதலே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரையின் பேரில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் முன்னெடுத்து வந்தார்.
கொழும்பில் உள்ளவர்களை ஊர்களுக்கு அனுப்புவது நோய்ப் பரவலை மேலும் தீவிரமாக்கும் என்று முன்னதாக சுகாதார அதிகாரிகள் இதற்கு அனுமதி தர மறுத்துவிட்டனர். எனினும், தற்போது சுமார் 40 நாட்களுக்கும் மேலாக இவர்கள் அடைப்பட்டு இருக்கும் நிலையில், இவர்களுக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டு, ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் சிக்கியுள்ள மலையகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர் பட்டியல் ஒன்றை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், அண்மையில் தயாரித்து கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கையளித்திருந்தார்.
இவர்களில் உடல் ஆரோக்கியம் குறைவானவர்கள் முதல்கட்டமாக 16 வயதிற்குட்பட்டோரும், 60 வயதிற்கு மேற்பட்டோரும், கர்ப்பிணிப் பெண்களும், உடல் நலக்குறைவானோரும் தெரிவுசெய்யப்பட்டு ஊர்களுக்கு இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களுக்கு கொவிட் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் ஊர்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பதுளையைச் சேர்ந்த 49 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 71 பேரும், கண்டியைச் சேர்ந்த 63 பேரும், கேகாலையைச் சேர்ந்த 28 பேரும், இரத்தினபுரியைச் சேர்ந்த 46 பேரும், மொணராகலையைச் சேர்ந்த 26 பேரும் என மொத்தமாக 350 பேர் இன்று ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களை ஒருங்கிணைக்கும் பணிகளை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் முன்னெடுத்திருந்தார்.
கொழும்பில் சிக்கியுள்ளவர்களை ஊர்களுக்கு அழைப்பது குறித்து கடந்த மூன்று அமைச்சரவைக் கூட்டங்களின் போதும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரையின் பேரில் கொழும்பில் தங்கியிருந்த பெரும்பாலான மலையகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *