திரையுலக கனவுகளைக் கட்டிப்போட்ட கொரோனா

தமிழ் சினிமாவுக்கு இது இருண்ட காலம். நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்பே, கடந்த மார்ச் 16-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும், மால்களையும் மூடுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியாகி 1 மாதத்துக்குமேல் கடந்த நிலையில், தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும், படத்தை எப்போது ரிலீஸ் செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கிடக்கிறது தமிழ் திரையுலகம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் திரையுலகுக்கு மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய திரையுலகின் ஒட்டுமொத்த நஷ்டம் சுமார் ரூ.2000 கோடியாக உள்ளது.

அதிலும் அதிக வட்டிக்கு கடன்வாங்கி படமெடுக்கும் சிறிய தயாரிப்பாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
பாதிப் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ள நிலையில் மீண்டும் எப்போது படப்பிடிப்பு நடக்கும் என்று தெரியாமல் ரஜினிகாந்தின், ‘அண்ணாத்தே’, அஜித்தின் புதிய படம்  உட்பட ஏராளமான படங்கள் காத்துக் கிடக்கின்றன.

இதில் பல தயாரிப்பாளர்கள் வட்டிக்கு பணம் வாங்கி படத்தை தயாரித்து வருவதால், இடைப்பட்ட காலத்தில் அவர்கள் செலுத்திய வட்டி மட்டுமே பல கோடி ரூபாய்களைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டாலும், படப்பிடிப்பை மீண்டும் தொடங்க நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கால்ஷீட் கிடைக்குமா?

மீண்டும் படம் எடுக்க பணத்தைத் திரட்ட முடியுமா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
பணிகள் முடியாத படங்களுக்கு இந்த கஷ்டமென்றால், ஏற்கெனவே பணிகள் முடிந்த விஜய்யின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளியாக வேண்டிய இந்தப் படங்கள், தற்போது மாதக்கணக்கில் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கல்லா கட்டினால்தான் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வசூலில் தப்பிக்கும்.

ஆனால் இப்போது பல வெளிநாடுகளில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், பட வெளியீட்டை தயாரிப்பாளர்கள் வேறு வழியின்றி  தள்ளிவைத்துள்ளனர்.
தயாரிப்பாளர்களின் நிலைதான் இப்படியென்றால், தியேட்டர் உரிமையாளர்களின் நிலை மேலும் மோசமாக இருக்கிறது.

மார்ச் 16-ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், தியேட்டர்கள் வருமானமின்றி கிடக்கின்றன.
அதேநேரத்தில் தியேட்டர் ஊழியர்களுக்கான சம்பளம், குறைந்தபட்ச மின் கட்டணம், பராமரிப்பு செலவு ஆகியவற்றை சமாளித்தாக வேண்டிய நிலைக்கு தியேட்டர் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தியேட்டர் உரிமையாளர் ஒருவர் இதுபற்றி கூறும்போது, “இதுபோன்ற நேரத்தில்  வேலையாட்களை  நீக்குவதும் கஷ்டம்.
தியேட்டர் தொழில்நுட்பம் தெரிந்த அவர்களை இப்போது வேலையில் இருந்து நீக்கிவிட்டால், பின்னர் தியேட்டரைத் திறக்கும்போது சரியான ஆட்கள் இல்லாமல் திண்டாட வேண்டிவரும்.

எனவே தியேட்டர்களைத் திறக்காத நாளிலும் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து எங்களுடன் தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது” என்கிறார்.
தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்களின் நிலை இப்படியென்றால், திரைப்படத் தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது.

தினசரி படப்பிடிப்பு நடந்தால்தான் சம்பளம் என்ற நிலையில் உள்ள இவர்கள், இப்போது படப்பிடிப்புகள் இல்லாத நிலையில் அத்தியாவசிய தேவைகளைத் தீர்த்துக் கொள்ளவே போராடி வருகிறார்கள்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகளைத் திறப்பதற்கு இன்னும் பல நாட்கள் ஆகும் என்று கருதப்படுகிறது. அப்படி நடந்தால் திரையுலகின் நிலை இன்னும் மோசமாகும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *