விலைமாதுவின் அனுபவ கதை

சமூகத்தில் ஒதுக்கி வைத்த மங்கையாய்
என்னை மாற்றிய மனிதர்களே
எனக்குள்ளும் மனம் உண்டு என்பதை
மறந்துவிட்டு மகிழா தீர்கள்

எனக்குப் பிடித்தா இத் தொழில் செய்கின்றேன்
இல்லை உங்களுக்குப் பிடிக்கவா இத்தொழில் செய்கின்றேன்

அவமானங்களை அள்ளி சுமந்த என் மனதிற்கு மட்டுமே என் கதை தெரியும்

அன்பென்ற தொட்டிலுக்குள் பல பாச உறவுகள் தாலாட்ட கண்மூடி கனவில் நீச்சல் அடித்தவள் தான் நான்

வறுமை எங்களை வாட்ட வாழ்வதற்காக வேலைக்குச் சென்றால் என்னோடு வாழ்ந்துவிடு வேலை செய் என்றார் முதலாளி

வெட்கத்தோடு தரவேண்டிய என் உடம்பை என் கஷ்டத்தால் பேரம் பேசி எடுத்துக் கொண்டான் அவன்

அழுதால் கூட மனம் இழப்போம் என மனதுக்குள்ளே பூட்டி கொண்டேன்

இரவு வேலை செய்தபோது கஞ்சா இழுத்த குழுவினர் என் கண்ணை கட்டி சீரளித்தார்கள்

உடம்பு முழுக்க காயங்களோடு யாரென்றே தெரியாத அவர்களை நினைத்து அழுதபோது
என் நடத்தை தப்பென்று என் பெற்றோரை தூக்கில் ஏற்றி வைத்தார்கள் அயலவர்கள்

நாமும் இறந்து விடுவோம் என துக்கத்தில் கதறியபோது என் தங்கை அக்கா சாப்பிட வேண்டும் என பசியில் பிதற்றினாள்

எங்களுக்கு கல்வியும் கண் திறக்கவில்லை கடவுளும் சிறிது கை காட்டவில்லை

அடுத்து என்ன செய்வோம் எனும் யோசிக்கும் முன்னரே என் வீட்டுக்கு வா எனக் கூறி அங்கு ஒருவன் பசியாறினான்…

கரை படிந்த எனக்கு யாரும் வேலை தரவில்லை
உணவு உண்ணவும் இருக்கவில்லை

வாழ்க்கை எனும் நாடகத்தில் நடித்தே நாம் ஆக வேண்டும்
என்ற காரணத்தினால் நடிக்க தொடங்கினேன்

பல ஆண்களின் அற்ப ஆசைக்காக நான் ஒரு நாள் ஈசல் ஆகினேன்

மனம் முழுதும் கவலை சுமையின் வலி

கஞ்சா பாசத்தோடு முத்தம் தந்ததால் உதட்டில் எரிவு

மார்பு முழுதும் நகத்தின் கீறல்கள்

நீர் அருந்த முடியாத வண்ணம் அடி வயிறு வலி

எத்தனையோ சொல்லற்ற சோகங்கள் எனக்குள்ளே புதைந்தன

ஆறுதல் கூட கிடைக்காத ஒரு அடித்தள ஜென்மமாய் ஆகிவிட்டேன் நான்

நான் யாரை குறை கூறுவேன் என் பரந்த கனவுகளை பிரித்து சூறையாடிய நல்லவர்களையா

என்னைக் கண்டாலே கயவர்கள் கணக்கிட்டு சில்லறை பேசும் சினேகிதர்களையா

அனைவரும் உங்கள் வாழ்க்கையை வாழுகின்றீர்கள்
ஆனால் நான் சில ஆண்களுக்காக என் வாழ்க்கையை அடகு வைத்து விட்டேன்

இந்தக் கண்ணீர் கடலான என் வாழ்க்கையிலே நீங்கள் என்னை செல்லமாய் கூப்பிடும் பெயர் விபச்சாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *