பிணங்களை மூட்டைகளில் அள்ள வேண்டிய நிலை ஏற்படும்

கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளா்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “உலக சுகாதார நிறுவனத்திடம் ஆரம்பத்திலேயே அதிகமான தகவல்கள் இருந்தன.
ஆனால் அவர்கள் சீனாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். அவர்களது பல விஷயங்கள் தவறாக இருந்தன.

தொற்று பரவிய ஆரம்ப காலத்தில், சீனாவுக்கு எல்லையைத் திறந்து வைக்க அறிவுறுத்தினர். அதிர்ஷ்டவசமாக நான் அதை நிராகரித்தேன். அவர்களுக்கான நிதியை நிறுத்தி வைப்பது குறித்து சிந்திப்போம்.
அவர்கள் தொடர்ந்தும் சீனாவுக்கு சார்பாகவே செயல்படுகிறார்கள். சீனாவிலிருந்து கொரோனா ஆபத்தானதாக மாறப்போகிறது என்கிற எச்சரிக்கையை கூட அவர்கள் உலகத்திற்கு வழங்கவில்லை. தவறான முடிவினை அவர்கள் எடுத்துவிட்டார்கள்” என்று கூறியிருந்தாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் ஆதனாம், “கொரோனாவை வைத்து அரசியல் செய்ய கூடாது.
அமெரிக்காவும், சீனாவும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. நாம் மிக மோசமான எதிரியை எதிர்கொண்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் உலக அரசியலை சூடாக்குவது சரியானது கிடையாது.

இப்போது போய் நெருப்போடு விளையாடக் கூடாது. உலக அரசியலிலும், தேசிய அரசியலும் சண்டை ஏற்பட்டால் பெரிய பிளவு ஏற்படும்.
இந்தப் பிளவு வழியாகத்தான் கொரோனா உள்ளே வரும். அங்குதான் கொரோனா வெற்றிபெறும். ஏற்கனவே 75 ஆயிரம் பேருக்கும் அதிகமாக இறந்துவிட்டனர். முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்,

நாம் இங்கு அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மூட்டைகளில் பிணங்களை அள்ளும் நிலை வரும்.
உங்களுக்கு உங்கள் நாட்டில் அதிக பிண மூட்டைகள் வேண்டும் என்றால், இதை வைத்து அரசியல் செய்யுங்கள். இல்லையென்றால் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு உடனே களமிறங்கி பணியாற்றுங்கள்.

எங்கள் பக்கம் இருக்கும் தவறுகளை நாங்கள் ஆராய்ந்து அதை திருத்திக் கொள்வோம். கொரோனா குறித்து நாம் தெரிந்து கொள்ளாத விடயங்கள் இருக்கிறது.
நாம் பிறரை குற்றஞ்சாட்டி நேரத்தைப் போக்கிக் கொண்டு இருக்க கூடாது. ஒற்றுமை மட்டும்தான் இந்தக் கொரோனவை எதிர்கொள்ள ஒரே வழி” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *