கொரோனா நிதிக்காக ஜோஸ் பட்லரின் ஜெர்சி 65000 பவுண்ட்களுக்கு ஏலத்தில் விற்பனை

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஜோஸ் பட்லர் அணிந்திருந்த ஜெர்சி 65,000 பவுண்ட்களுக்கு (ரூ.1,56,37,198) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு பல்வேறு தரப்பினர் நிதியுதவியளித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக கடந்த ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியின் போது தான் அணிந்திருந்த ஜெர்சியை (Jersey) ஏலம் விடுவதாக அறிவித்திருந்தார்.

நியூசிலாந்திற்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவர் அரைச்சதம் அடித்தார். அத்துடன், ஆட்டம் சமன் ஆனதால், சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்ட போது, நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலை ரன்-அவுட் செய்து உலகக்கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த அந்த ஜெர்சி நிறுவனம் ஒன்றின் மூலம் ஒன்-லைனில் ஏலம் விடப்பட்டது.

ஏலத்திற்கு ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 82 பேர் ஏலம் கேட்டனர். இதனால் ஆயிரத்தில் ஆரம்பித்த தொகை இலட்சத்தைத் தாண்டியது. இறுதியில் இந்த ஜெர்சி 65,000 பவுண்ட்களுக்கு ஏலம் போனது. இந்தப் பணம் லண்டனில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இரண்டு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *