கோடம்பாகத்தை கதற வைத்த கொரோனா வைரஸ்

‘கோலிவுட்’ என்று சொல்லப்படும் தமிழ்த்திரை உலகில் இதற்கு முன்பும் வேலை நிறுத்தம் நடந்துள்ளது.

முடிவுறும் தேதி தெரியாவிட்டாலும், ஆரம்பமாகும் நாள் முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு விடும் என்பதால், அனைத்து தரப்பினரும் ஓரளவு முன்னெச்சரிக்கையுடன் இருப்பது வழக்கம்.
ஆனால், தற்போது கொரோனாவால் நீண்டு கொண்டிருக்கும் வேலை நிறுத்தம் யாரும் எதிர்பாராதது.
பிரதமர் மோடி, இந்திய ஊரடங்கைப் பிரகடனம் செய்யும் முன்பே, சினிமா தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய பணிக்கப்பட்டனர்.

‘மிஞ்சிப் போனால் ஒரு வாரம் நடக்கும்’ என்றே ஆரம்பத்தில் கணிக்கப்பட்டது.
அதன் பிறகே இந்திய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

“21 நாள் வீட்டுக்குள் தனிமைப் படுத்திக்கொள்ளுங்கள்’’ என்று மோடி அறிவித்த ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

கோடம்பாக்கத்தில் வேலை நிறுத்தம் 10 நாட்களுக்கு மேலாக நீடிக்கிறது.

ஷூட்டிங் நடக்கவில்லை.

ஸ்டூடியோக்களில் எந்த வேலையும் இல்லை.

திரை அரங்குகளும் மூடப்பட்டுவிட்டன.

இதனால் யாருக்கு பாதிப்பு?

23 சங்கங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பில் (பெப்சி) அங்கம் வகிக்கும், தினக்கூலி ஆட்கள் தான் நொந்து நூலாகி போனவர்கள்.
இந்த இனத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

ஒவ்வொருவரின் கதையும் கண்ணீர் வரவழைக்கும் ரகம்.
ஷூட்டிங் நடக்காததால் உணவு பரிமாறும் ஊழியரின் இன்றைய நிலை தெரியுமா?

“என்னைப் போன்ற தினக்கூலிகளால் 21 நாள் ஊரடங்கு என்பது ஜீரணிக்க முடியாத விஷயம். அத்தியாவசியத் தேவைகளுக்குக் கடன் கேட்டால் தருவதற்கு ஆட்கள் உண்டு.
ஆனால் இப்போது விவகாரம் வேறு. கடன் கேட்டால், வேலை ஆரம்பித்ததும் கடன் தருகிறேன் என்கிறார்கள்.

இப்போது எனக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட, இன்னும் நான்கு மாத உழைப்புத் தேவைப்படும். ஷூட்டிங் ஆரம்பித்தால், ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் உழைத்தால் மட்டுமே இது சாத்தியம்’’ என்கிறார் உணவு பரிமாறும் தொழிலாளி.
உதவி இயக்குநர்கள் நிலைமை ரொம்பவும் மோசம்.

“ஷங்கர், அட்லீ போன்ற பெரிய இயக்குநர்களிடம் உதவியாளர்களாக இருப்போருக்கு பிரச்சினை இல்லை. அந்த இயக்குநர்களுக்கு படங்கள் இல்லையென்றாலும் உதவியாளர்களுக்கு  மாதச்சம்பளம் கிடைத்து விடும்.
சின்ன இயக்குநர்களிடம் வேலைபார்க்கும் உதவி இயக்குநர்கள் பாடுதான் திண்டாட்டம்” என்கிறார் பெப்சி ஊழியர் ஒருவர்.

துணை நடிகர்கள், குரூப் டான்சர்கள் உள்ளிட்டோர், தங்களுக்கு சினிமா நிரந்தரமாக சோறு போடாது என்பது தெரியும்.
அதனால், திருமண நிகழ்ச்சிகளில் சமையல் வேலையில் உதவுவது (காய்கறி நறுக்குதல், பரிமாறுதல்) போன்ற தொழில்களில் ஈடுபடுவது வழக்கம்.

வேறு சிலர் உபேர் கார் ஓட்டுநர்களாகவும்  அவ்வப்போது மாறுவது உண்டு.
விழாக்களுக்கு ‘தடா’ போட்டுள்ளதால், அந்த வேலையும் போச்சு.

சின்னத்திரை சீரியல்களில் பணியாற்றிய ‘டெக்னீசியன்கள்’ நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது.
ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு சென்னையில் பல்வேறு இடங்களில் 50- க்கும் மேற்பட்ட டி.வி. சீரியல் ஷூட்டிங் நடந்து வந்தது.

ஒவ்வொரு ஷூட்டிங்கிலும் குறைந்தபட்சம் 50 பேருக்கு வேலை இருந்தது.

அந்த டெக்னீசியன்கள், இப்போது அரை வயிற்றுக் கஞ்சிக்கு அல்லாடுகிறார்கள்.

ரஜினிகாந்த் உள்ளிட்ட சில பிரபலங்கள், இந்தத் தொழிலாளர்களுக்கு  பண உதவி செய்துள்ளனர்.
பெப்சியில் உறுப்பினர்களாக உள்ள 25 ஆயிரம் பேருக்கு இந்தத் தொகையை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பங்குபோட்டு கொடுப்பதற்குள், அவர் தலை கிறுகிறுத்து விடும் என்கிறார்கள், பெப்சி நிர்வாகிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *