முதியோர் இல்லத்தில் பல நாட்களாக உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள்

கொரோனா வேகமாக பரவி வரும் ஸ்பெயின் நாட்டில் கைவிடப்பட்ட முதியோர் 12 பேர் படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா வைரசால் இதுவரை 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சீனாவை விட உயிரிழப்பு அதிகமாகி வருவதால் வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் முதியவர்களுக்கு வைரஸ் எளிதாக தொற்றிக் கொள்ளும் என்பதால் அந்நாட்டில் ஆதவற்ற இல்லங்களில் உள்ள முதியவர்கள் குறித்து கண்டிறிய ராணுவ வீரர்களை பல்வேறு இடங்களுக்கு குழுவாக அரசு அனுப்பியுள்ளது.

மேலும், முதியோர் இல்லங்களில் கிருமி நாசினிகளை தெளிக்கவும் ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி தலைநகர் மாட்ரிட்டில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு முதியோர் இல்லத்தில் துர்நாற்றம் வீசியதையடுத்து, கிருமி நாசினி தெளிப்பதற்காக ராணுவ வீரர்கள் உள்ளே சென்ற போது, அவர்கள் கண்ட காட்சி உறைய வைத்துள்ளது.

ஏனென்றால் முதியவர்கள் கவனிக்க ஆளில்லாமல் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தனர். அதிலும் ஒரு சில முதியவர்கள் படுக்கையிலேயே இறந்து கிடந்தனர். முதியோர் இல்லத்தின் பராமரிப்பாளர் சிறிதும் மனிதாபிமானமின்றி அவர்களை அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர்.

இதன் காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்து கிடந்த 12 முதியவர்கள் எவ்வித சிகிச்சையும் கிடைக்காமல் படுக்கையிலேயே தங்கள் உயிரை விட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் ராணுவ அமைச்சர் மரியா லூயிசா கார்சிடோ கூறுகையில், “இந்த மாதிரியான மனிதாபிமானமற்ற செயல்களை அரசு சகித்துக் கொள்ளப் போவதில்லை. தங்கள் கடமைகளை புறக்கணிக்கும் எவரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *