கொழும்பு,கம்பஹா மற்றும் களுத்துறை அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் இன்று காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதும் அதிகளவிலானவர்கள் வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய ஒன்றுகூடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பாரிய தடையாக அமைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் எதிர்காலத்தில் மக்களுக்குத்தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யுமாறு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சதொச , கீல்ஸ் , லாஃப்ஸ், ஆர்பிக்கோ, ஃபுட் சிட்டி, அரலிய , நிபுண மற்றும் ஏனைய மொத்த விற்பனை நிறுவனங்களை இந்த நடவடிக்கையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்யும் திட்டத்தை செயற்றிறனுடன் முன்னெடுப்பதற்காக பசில் ராஜபக்ஸவின் தலைமையில் செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் இந்த செயலணியின் ஏனைய உறுப்பினர்களாவர்.

அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் மருந்து எரிவாயு உள்ளிட்ட ஏனைய சேவைகளையும் தொடர்ச்சியாக மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

லொறி, வேன், முச்சக்கரவண்டி , மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற அனைத்து விநியோக வாகனங்களும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதிகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *