வசன உச்சரிப்புக்குப் பெயர் போன விசு காலமானார்

வசன உச்சரிப்புக்குப் பெயர் போன விசு!
நாடகத்திலிருந்து சினிமாவுக்குள் நுழைந்து, சின்னத்திரையிலும் தன் பெயரைப் பதித்த விசு, இயக்குநர் பாலசந்தரின் படங்களில் வசனம் எழுத ஆரம்பித்தார். உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.

ரஜினி, லெட்சுமி நடித்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய “நெற்றிக்கண்’’ விசுக்குத் தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தியது.
குடும்பம் ஒரு கதம்பம், மணல்கயிறு போன்ற படங்களை இயக்கி நடித்த அவருடைய பெயரைத் தேசிய அளவில் எடுத்துச் சென்றது அவர் இயக்கி, நடித்த ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம்.

தேசிய விருதைப் பெற்ற அந்தப் படம் பல மொழிகளில் ரீ-மேக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.  1986 ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதும் அதற்குக் கிடைத்தது.
மனோரமாவும், விசுவின் சகோதரரான கிஷ்முவும் பங்கேற்கும் காட்சிக்கு அபார வரவேற்பு கிடைத்தது.

பல படங்களில் நடித்திருக்கிற விசு, ரஜினி நடித்த பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். பி.வாசு இயக்கிய ‘மன்னன்’ படத்திலும் அவர் நடித்திருந்தார்.

அவருடைய தனித்திறமை வசனத்தை ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்கிற விதம் தான். அது தான் அவருடைய பாணியாகவே அமைந்தது.
சன் டிவியில் வெளிவந்த ‘அரட்டை அரங்கம்’ தொடரை இயக்கிப் பங்கேற்று லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுத் தந்தது. பிறகு ‘மக்கள் அரங்கம்’ என்ற பெயரில் ஜெயா டி.வியில் தொடர்ந்தார்.
கதை, வசனம், தயாரிப்பு, நடிகர் என்று இயங்கிய விசு வசனம் எழுதிய ‘நெற்றிக்கண்’ படம் தொடர்பாக அவர் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கை பரபரப்புக்குள்ளானது.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், இயங்கி வந்த விசு கொரோனாவுக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வேளையில் மறைந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *