ஒரு நாற்காலியால் இத்தனை பிரச்சினையா

சமீபகாலமாக நோய்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?  ‘மது… புகை… துரித உணவுகள்… கொசு… நுண்கிருமிகள்…. இல்லை இதுபோல் வேறு ஏதாவது…’ என்பது உங்களது பதிலாக இருந்தால், அவையெல்லாமே சரிதான். இவையெல்லாமே நமக்குத் தெரிந்த எதிரிகள். ஆனால், நாம் நினைத்துப் பார்த்திராத உயிர்க்கொல்லி ஒன்று இந்த பட்டியலில் இடம்பெறாமலேயே இருக்கிறது. அதுதான் நாற்காலி. ‘நாற்காலி அமர்வதற்குத்தானே உதவும்… ஆளையுமா கொல்லும்’ என்று தோன்றுகிறதா? ‘Yes… Sitting also kills’ என்றுதான் பதிலளிக்கிறார்கள் மருத்துவர்களும், அவர்களின் பதிலுக்கு ஆதாரம் சேர்க்கும் நவீன ஆய்வுகளும்…

இது தொழில்முறை மாற்றங்கள், வாழ்க்கைமுறை மாற்றங்களால் Sedentary life style-ல் இருக்கும் நாம் அனைவருமே அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயமும்கூட! காலையில் தூங்கி எழுவது முதல் இரவு திரும்பப் படுக்கைக்குப் போகும் வரையான ஒருநாள் வாழ்வின் செயல்பாடுகள் அனைத்தையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்… காலையில் படுக்கை, அங்கிருந்து எழுந்ததும் வெஸ்டர்ன் டாய்லெட், டைனிங் டேபிளில் சாப்பாடு, அலுவலகத்துக்கு வாகனப் பயணம், அலுவலகத்தில் உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையாமல் செய்யும் 8 மணி நேர வேலை,

திரும்பவும் உட்கார்ந்தே வீட்டுக்குப் பயணம், வீட்டுக்கு வந்தால் ஒய்யாரமாக சோஃபாவில் சாய்ந்து கொண்டே தொலைக்காட்சி அல்லது லேப்டாப்பில் வேலை, அடுத்து நேராகப் படுக்கை, இல்லாவிட்டால் திரையரங்கம், பார்… இப்படி எல்லா இடங்களிலுமே நாள் முழுவதும் நாம் அமர்ந்தேதான் இருக்கிறோம். எல்லா வேலைகளிலுமே அமர்ந்தேதான் இருக்கிறோம். கஷ்டப்படாமல் நளினமாகச் செய்யும் வகையில்தான் வாழ்க்கையும் போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு நாளில் இப்படி நாம் உட்கார்ந்தே இருக்கும் நேரங்களைக் கூட்டினால் சராசரியாக 12 மணி நேரம் நாற்காலியிலேயே நாம் செலவிடுகிறோம். அதாவது, சரியாக ஒரு நாளின் பாதி. சரி… இது எங்கே போய் முடியும்? நீண்டநேரம் அமர்ந்தே இருக்கும் நம் உடலில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி, கடந்த 10 வருடங்களில் ஏறக்குறைய 20-க்கும் அதிகமாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உடல் எடை அதிகரிப்பு, அதனால் நீரிழிவு, இதயநோய், ரத்த அழுத்தம் என பல நோய்கள் அமர்ந்தே இருப்பதால் வருகின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதில் ஆண்களைவிட பெண்கள் சற்று அதிகம் பாதிக்கப்படுவதாக அமெரிக்க புற்றுநோய் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ‘நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பவர்களுக்கு உடலின் வளர்சிதை மாற்ற செயலிழப்பு(Metobolic dysfunction) ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களிடத்தில் எலும்பு, மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று குறிப்பிட்டிருக்கிறது.

தென்கொரிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழுவின் தலைவரான டாக்டர் சீனுகோரே இதுபற்றிய முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். ‘‘சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரை இரண்டாகப் பிரித்து மேற்கொண்ட ஓர் ஆய்வில் யார் உடலுழைப்பற்ற வாழ்க்கையை நடத்துகிறார்களோ அவர்கள் மது அல்லாத கல்லீரல் கொழுப்பு நோயால்(Non Alcoholic Fatty Liver Disease) அதிகம் பாதிக்கப்படுவதைக் கண்டறிந்தோம்.

நம் நாற்காலிகளே மெல்ல மெல்ல நம் உயிரைப் பறிக்கின்றன. மனித உடலானது ஓடவும், ஆடவும், வேட்டையாடவும், அசைவுக்காகவும் வடிவமைக்கப்பட்டதே அன்றி, உட்கார்ந்திருப்பதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்படவில்லை. 4 மணி நேரத்துக்கும் மேல் உட்கார்ந்திருக்கும் ஒருவரது உடல் கொழுப்பானது கொஞ்சம் கொஞ்சமாக கல்லீரலில் படிய ஆரம்பித்து, மது அருந்துபவரின் கல்லீரலைப் போன்றே முற்றிலுமாக செயலிழக்கச் செய்துவிடும்’’ என எச்சரிக்கிறார்.

உட்கார்ந்திருக்கும் நேரம், மரபணு மாறுபாட்டிலும் தாக்கம் ஏற்படுத்துவதாக அமெரிக்க டஸ்கானின் அரிஸானா பல்கலைக்கழக தலைமை ஆய்வாளரான யான்கிளிமென்டைடிஸ் கூறுகிறார். அதுமட்டுமல்லாது, மனிதனிடம் DNA செல்லில் காணப்படும் Telomeres-தான் குரோமோசோம்களை பாதுகாப்பவை. இதன் நீளத்தைப் பொறுத்தே வயதோடு தொடர்புடைய நோய்கள் ஏற்படுகின்றன. அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களின் Telomeres நீளம் குறைவதால் ஆயுளும் குறைவதாக ஸ்வீடன் நாட்டு கரோலின்ஸ்கா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

‘மாதவிடாய் சுழற்சி நின்றபிறகு பெண்கள் உடலில் நிறையவே ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால், மெனோபாஸுக்குப் பின் உடலுழைப்பில்லாமல் நீண்டநேரம் உட்கார்ந்திருக்கும் பெண்கள் தங்கள் ஆயுளில் 8 ஆண்டுகளை இழக்கிறார்கள்’ என அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது. நீண்ட நேரம் உட்கார்ந்துகொண்டே விளையாடும் வீடியோ கேம், டிவி, ஸ்மார்ட்போன் உபயோகம் போன்றவை குழந்தைகளிடத்திலும், இளைஞர்களிடத்திலும் டைப்-2 நீரிழிவை அதிகரித்துள்ளதாக அமெரிக்கன் டயாபடிஸ் அசோசியேஷன் எச்சரிக்கிறது.

டைப் -2 டயாபட்டீஸ் அதனால் ஏற்படும் இதயநோய்கள் போன்றவை பணியிடங்களிலும், ஓய்வு நேரங்களிலும் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடுகிறது. இதற்கெல்லாம் தீர்வாக டென்மார்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான ஐடா டன்குவா வழி ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். அலுவலக வேலை நேரமான 8 மணிநேரத்தில் 71 நிமிடங்களைக் குறைத்தும், 1 மணிநேரம் நின்றுகொண்டும், 1 மணி நேரம் உட்கார்ந்து கொண்டும் செய்யும் வகையில் அலுவலக பணிச்சூழலை அமைத்துக் கொடுத்து டென்மார்க் அலுவலகம் ஒன்றில் 1 மாத ஆய்வினை மேற்கொண்டார்.

பணியாளர்களை நடுநடுவே சிறிது தொலைவு நடக்கவைத்தும், சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை செய்ய வைத்தும் ஆய்வினை மேற்கொண்டார். இதன்மூலம் அந்த ஊழியர்களின் உடல்பருமனில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டதை உணரமுடிந்தது. இந்த குறிப்பிட்ட ஆய்வின் அறிக்கை International Journal of Epidemiology பத்திரிகையில் வெளியிடப்பட்டது. முதற்கட்ட முயற்சியாக டென்மார்க் அலுவலகங்களில் நின்றுகொண்டும், அமர்ந்துகொண்டும் செய்யும் வகையில் பிரத்யேகமாக மடக்கும் மேஜைகளை வடிவமைத்து தொடங்கப்பட்டு தற்போது பல நாடுகளிலும் இம்முறை செயல்படுத்தப்படுகிறது.

இந்த முறை உலகம் முழுவதும் பரவ இன்னும் சில ஆண்டுகளாவது ஆகும். அதுவரை, நாமே சில சின்னச்சின்ன மாற்றங்களை மேற்கொண்டால் போதும். அலுவலகத்தில் லிஃப்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் ஏறிச் செல்லலாம்; உட்கார்ந்த இடத்திலேயே டீ அருந்தாமல் நடந்து சென்று அருந்திவிட்டு வரலாம்; அடுத்த கேபினில் இருப்பவருக்கும் மெயில் அனுப்பாமல் நடந்து சென்று தகவல்களை கொடுக்கலாம். இப்படி சின்னச் சின்ன விஷயங்களை கடைபிடித்தாலே அமர்ந்திருக்கும் நேரம் குறையும். நம் ஆரோக்கியமும் அதிகரிக்கும்!

  • இந்துமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *