சஜித் கூட்டணி பெரும் சவாலாக இருக்கும் சென்னையில் ஹக்கீம்

சஜித் தலைமையிலான கூட்டணி ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்: சென்னையில் ரவூப் ஹக்கீம்
ஜனாதிபதி வேட்பாளராக களம் கண்ட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் தொடர்ந்து நாங்கள் களம் காண்கின்றோம். இக்கூட்டணி ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (02) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டபோது, சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஆசாத், மாவட்ட சிறுபான்மை இணைச் செயலாளர் இப்ராஹிம் கனி, திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோர்கள் ரவூப் ஹக்கீமுக்கு பொன்னாடை போர்த்தி விமான நிலையத்தில் வரவேற்பளித்தனர்.

அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்க அளித்த பதில்கள் வருமாறு;

கேள்வி: பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் உங்களது நிலைப்பாடு எப்படியிருக்கும்?

பதில்: திங்கட்கிழமை நள்ளிரவுடுன் பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது. கடந்த தேர்தலின்போது ஜனாதிபதி வேட்பாளராக களம் கண்ட சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து நாங்கள் களம் காண்கின்றோம். இக்கூட்டணி ஆளும் கட்சிக்குப் பெரும் சவாலாக இருக்கும்.

கேள்வி: இந்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: இந்தியாவில் குடியுரிமை சட்டம் குறித்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் மிகவும் கவலைக்குரியது. இந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டும். இந்த சட்டமூலம் தொடர்பாக தொப்புள்கொடி உறவுகளான இலங்கையில் வாழ் மக்களாகிய நாங்களும் கவலை கொள்கிறோம்.

கேள்வி: தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்: ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது பிழையான தகவல். உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளில் சிங்கள மொழியில் பாடுவதுடன் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடுவதை முன்னைய அரசாங்கத்தில் நாங்கள் வழமையாகக் கொண்டிருந்தோம். அந்த வழமையை தற்போதைய அரசாங்கம் மாற்றி, சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. நல்லிணக்கம் காரணமாக கொண்டுவரப்பட்ட அந்த வழமை தற்போது மாற்றப்பட்டுள்ளதால், அது தமிழர்களின் மனதை புண்படுத்தியுள்ளது.

கேள்வி: இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பாக இதுவரை விசாரணை நடைபெறவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கவலை தெரிவித்திருக்கிறார். இனியேனும் அந்த விசாரணை நடைபெறுமா?

பதில்: இலங்கையில் தற்போதுள்ள அரசு ஐக்கிய நாடுகள் சபையுடன் கூட்டாக நிறைவேற்றிய பிரேரணையில் இருந்து விலகுவதற்கு அரசு தீர்மானித்திருக்கிறது. இந்த நடவடிக்கை சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசு எடுத்து வரும் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இலங்கையில் நடைபெற்ற போரின்போது போர்க்குற்றங்கள் நடைபெற்றனவா இல்லையா என்பதில் சர்வதேச அரசியல் தலையீடு எதுவும் இருக்கக்கூடாது என்பது தற்போதைய ஆட்சியாளர்களின் நீண்டநாள் கொள்கையாக உள்ளது. எனவே, இது குறித்த சர்ச்சை சர்வதேச அளவில் இன்னும் விரிவடையும் வாய்ப்பிருக்கிறது.

கேள்வி: உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களின் பாதுகாப்பில் பிரச்சினையை நிலவியதே? தற்போது அதன் நிலை என்ன?

பதில்: அந்தப் பதற்றம் தற்போது ஓரளவுக்கு தணிந்திருக்கிறது. இருந்தாலும் சிலு அரசியல்வாதிகள் வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து பொதுவெளியில் பேசிக் கொண்டிருப்பதால், அது மனங்களை வேறுபடுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலை தொடராமலிருக்க வேண்டும் என்பதே எமது அவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *