நாளை நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும்! பிரதமர் தலைமையில் தலைமையில் கால்பந்து அரசாங்கம்

பாராளுமன்றம் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதுடன் ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி குறிப்பிட்ட அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் வெளியிடப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் நேரம் முதல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான காபந்து அரசாங்கம் கடமையேற்கும். காபந்து அரசாங்கத்தில் அதிகாரம் அமைச்சரவை அமைச்சர்களிடம் மட்டுமே இருக்கும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் முடிவுக்கு வந்துவிடும்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் தேர்தல்கள் ஆணைக்குழு 9ஆவது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ளவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
பாராளுமன்ற கலைப்பு தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகும் வேளையில் அதற்குச் சமாந்திரமாக பொதுத் தேர்தலுக்கான திகதியையும் ஜனாதிபதி அறிவிப்பார். அந்த திகதி பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமையாக இருக்குமென ஜனாதிபதி செயலகத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 11 ஆம் திகதிக்கும் 17ஆம் திகதிக்குமிடையில் ஏற்றுக் கொள்வதற்கான காலத்தை தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி நண்பகல் வரை சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்படும். 17ஆம் திகதி காலை வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 10 மணிமுதல் 10.30 வரை ஆட்சேபனைக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு பகல் 11 மணிக்கு வேட்புமனுக்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
சுயேச்சைக் குழுக்கள் ஒரு வேட்பாளருக்கு கட்டுப்பணமாக இரண்டாயிரம் ரூபா செலுத்த வேண்டும். பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு கட்டுப்பணம் செலுத்த வேண்டியதில்லை. 25 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு இந்த தேர்தல் நடத்தப்படும்.
2019ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்புக்கமைய ஒரு கோடியே 62 இலட்சத்து 63ஆயிரத்து 885 பேர் இத் தேர்தலில் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணிகளை அமைத்து களமிறங்குவது விசேட அம்சமாக கருதப்படுகின்றது. அத்துடன் இதுவரை பயன்படுத்தப்பட்ட பிரதான கட்சிகளின் சின்னங்களான யானை, கை, கதிரை, வெற்றிலை, மணி போன்ற சின்னங்கள் காணாமல் போய் மொட்டு, அன்னம், திசைகாட்டி போன்ற புதிய சின்னங்களே உள்வாங்கப்பட்டுள்ளன.பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் எதிர்வரும் ஐந்தாம் திகதி வியாழக்கிழமை அனைத்து தெரிவித்தாட்சி அதிகாரிகள், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்களை உள்ளடக்கிய முக்கிய கூட்டமொன்றுக்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரட்ணாயக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.
தேர்தல் நடைபெறும் போது அந்தந்த மாவட்டங்களில் கடமைகளில் ஈடுபடும் போது எதிர்கொள்ளக் கூடிய பிரச்சினைகள், நெருக்கடிகள் தொடர்பாகவும், வாக்களிப்பு நிலையங்கள், வாக்குகள் எண்ணப்படும் நிலையங்கள் தொடர்பாகவும் மேலதிக வாக்களிப்பு நிலையங்கள், வாக்குகள் எண்ணப்படும் நிலையங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அதிகாரிகள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பாகவும், பொதுத்தேர்தலின்போது அவற்றை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படவிருப்பதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.பொதுத்தேர்தலில் கூடுதலான வேட்பாளர்கள் களமிறங்கினால் விருப்பு வாக்குகள் எண்ணப்படுவதற்கு கூடுதலான காலம் எடுக்கலாமென கருதப்படுவதால் அதற்கு மாற்றீடாக எவ்வாறான நடைமுறையைக் கையாள்வது என்பது குறித்தும் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்திவருகிறது.
பாராளுமன்றம் நாளையதினம் கலைக்கப்படுமிடத்து நாளை முதல் 14ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தபால் மூலவாக்களிப்புக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுமெனவும் எக்காரணம் கொண்டும் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்படமாட்டாதென்றும் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *