மத்திய வங்கி கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கொடுத்தே தீருவோம்

Image result for mahinda rajapaksa

மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தைக் கலைக்க, ஜனாதிபதி அனுமதியளிப்பார் என்று தானும், ஏனைய அமைச்சர்களும், எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பதுளைப் பகுதியைச் சேர்ந்த எட்டாம்பிட்டிய – வேல்லவெல நீர் விநியோகத் திட்டத்தை இன்று (17) வைபவ ரீதியாக திறந்து வைத்ததன் பின்னர் அங்கு கூடியிருந்த மக்களின் முன் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

“12 கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மேற்படி நீர்விநியோகத்திட்டத்ததை இன்று நான் திறந்து வைத்துள்ளேன். தற்போது இவ்வரசின் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஸ தெரிவாகியிருக்கின்றார். அத்துடன் பிரதமராக நானும்,ஏனைய அமைச்சர்களும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றோம்.

ஆட்சியை நாம் மேற்கொண்ட போதிலும் பாராளுமன்றத்தில் நாங்கள் சிறுபான்மையினராகவே இருந்து வருகின்றோம். எமக்கு குறைந்தளவு எண்ணிக்கையுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்து வருகின்றனர். கடந்த அரசின் காலத்தில் எமக்கு மிகுதியாக வைத்திருந்தது பெரும் கடன் சுமையேயாகும். அச்சுமையை ஈடு செய்ய முடியாத நிலையில் நாம் இருந்து வருகின்றோம்.

நாளைய பாராளுமன்ற அமர்வில் விசேட சட்டமூலமொன்றை நாங்கள் சமர்ப்பிப்போம். அச் சட்டமூலத்தை எதிர்க்கட்சியினர் நினைப்பார்களேயானால் தோல்வியடையச் செய்யலாம். அத் தோல்வி என்பது தற்காலிகமானதேயாகும். நாம் முன்வைக்கும் சட்டமூல பிரேரணை நாளைய தினம் தோல்வியடையுமேயானால் பொதுத் தேர்தல் ஒன்றிற்கு செல்வதற்கு ஏற்பாடுகளை செய்வோம். அதைத் தவிற வேறு வழி எமக்கு இல்லை.

பொதுத் தேர்தல் ஒன்றிற்கு நாங்கள் செல்லப்படும் பட்சத்தில் மக்களின் அமோக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியினை நாங்கள் அமைப்போம். அவ் அரசு மக்களின் அரசாகவே இருக்கும்.
கடந்த அரசைப் போன்று நித்திரை கொள்ளும் அரசாகவோ, வேலைத்திட்டங்களை மேற்கொள்ளாத அரசாகவோ, பேச்சளவில் மட்டும் செயற்படும் அரசாகவோ இருக்க மாட்டோம்.

எமது ஆட்சி உருவானதும்,மக்களுக்குப் பணியாற்றும் அதி சிறந்த அரசாகவும், நாட்டைத் துரிதமாக அபிவிருத்தி செய்யும் அரசாகவே நாம் செயற்படுவோம். கடந்து அரசு போன்று அரசியல் பலிவாங்கல்களை நாம் என்றும் மேற்கொள்ள மாட்டோம். கடந்த அரசு இப் பலிவாங்கல்களையே தொடர்ந்தும் மேற்கொண்டிருந்தது. எமக்கு எதிரான செயற்பாடுகளையே அவர்கள் மேற்கொண்டு வந்தனர். ஆனால், அவர்களால் எம்மை எதுவுமே செய்ய முடியவில்லை. காரணம் நாங்கள் எத்தகைய குற்றத்தையும் செய்யவில்லை என்பதனாலேயாகும்.

கடந்த அரசின் காலத்தில் மத்திய வங்கியின் கொள்ளை உலகிலேயே மிகப்பெரிய கொள்ளையாகவே கருதப்படுகின்றது. இக்கொள்ளையில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்த நாம் நடவடிக்கை எடுப்போம். நாம் நாட்டை அபகீர்த்தி அடையச் செய்ய மாட்டோம். கொள்ளைகளை மேற்கொண்டவர்களை, மக்கள் பணத்தை சுரண்டியவர்களை, நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றவர்களை தராதரம் பார்க்காது சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டனைப் பெற்றுக்கொடுப்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *