அமெரிக்காவின் அதிரடித் தடைக்கு ஆட்சேபனை எழுப்பியது இலங்கை!

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவுக்குள் உள்நுழைவதற்கு அந்த நாடு விதித்துள்ள தடைக்கு, இலங்கை அரசு தனது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“சுயாதீனமாக சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில், சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்க அரசால் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுக்காக இலங்கை அரசு தனது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவிக்கின்றது.

சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில், சவேந்திர சில்வா, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆதாரபூர்வமான அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை என்பதையும் அரசு மீண்டும் வலியுறுத்துகின்றது. அவர் மிகவும் மூத்த இராணுவ அதிகாரி என்ற காரணத்தால், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பதில் பாதுகாப்புத் தலைவராக தரமுயர்த்தப்பட்டார்.

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட 6 மாதங்களுக்குப் பின்னர் இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமையானது, தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் முக்கிய பதவிகளை வகிப்பதற்கு நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவத்துடன் கூடிய நபர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கான ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் சிறப்புரிமையை வெளிநாட்டு அரசு கேள்விக்குட்படுத்துகின்றமை ஏமாற்றமளிக்கின்றது.

தகவல் மூலங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், அதன் முடிவை மறுபரிசீலனை செய்வதற்கும் இலங்கை அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கின்றது” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *