தமிழ் மொழிக்கு எத்தனை வயது?

அடிப்படையில் மொழி என்பது கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான கருவி ஆகும். நாவு, உதடு, பல், உள்நாவு, வாய் ஆகியவற்றின் உதவியுடன் ஏற்படுத்தப்படும் ஒலிகளே மொழிக்கான அடிப்படை. இதை ஆங்கிலத்தில் போனடிக்ஸ் (Phonetics) என்போம். இந்த ஒலிகள் மட்டுமே ஆரம்பத்தில் மொழியாக இருந்தன. தன் உணர்ச்சிகளையும், மற்றவர்களை அழைப்பதற்குமான சில ஒலிகளைப் பிற உயிரினங்கள் போல தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினான் எம் மூதாதையன். மொழி பிறந்தது.

தமிழ் எனும் தாய்

ஒரு அழகான காலைப் பொழுது விடிகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து தென்னாபிரிக்கா வரை பெரும் நிலப்பரப்பு விரிந்து கிடக்கிறது. எங்கு நோக்கினும் காடுகள், மலைகள், பாறைகள். எல்லையில் ஆர்ப்பரிக்கும் கடல். மிருகங்கள், மீன்கள், மரம்-செடி-கொடிகளால் நிரம்பி இருந்த நிலப்பரப்பில், ஆதி மனிதன் தோன்றினான். கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனிதன் பார்த்த அந்த அகண்ட நிலத்தின் பெயர் “குமரிக் கண்டம்” என்கிறார் தேவநேயப்பாவாணர்.

பட உதவி : history.com
உலகிலுள்ள மொழிகளை பல வகைமைக்குள், ஒவ்வொரு குடும்பமாக பிரித்து வைத்திருக்கிறோம். இந்தோ-ஐரோப்பிய மொழிகள், ஆப்பிரிக்க மொழிகள், திராவிட மொழிகள், அமெரிக்க இந்திய மொழிகள் எனப் பல வகை உள்ளது. இவற்றில் தமிழ் என்பது திராவிட மொழிக் குடும்பத்தின் தாய் என்று கருதப்படுகிறது. பல மொழிகளின் தோற்றத்திற்குக் காரணமான மொழி, தொல்திராவிட மொழி என்று அழைக்கப் படுகிறது. தமிழில் இருந்து பிறந்த மொழிகள்: தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, கோண்டி, இன்னும் பற்பல உள்ளன. இப்படி பல மொழிகளுக்கு ஆதாரமாக விளங்கிய தமிழ் மொழி குறித்த மிகப் பழமையான குறிப்பு தொல்காப்பியத்தில் உண்டு. தமிழ் என்ற சொல் தொல்காப்பியத்தில் 386ஆவது பாடலில் வருகிறது.

“தமிழ்’ என் கிளவியும் அதன் ஓரற்றே”

தொல்காப்பிய ஏடு/

தமிழ் எனும் சொல் த்ராவிட என்ற சொல்லில் இருந்து தோன்றியது என்று சொன்னார் கால்டுவெல்.

த்ராவிட à திரமிட à த்ரமிள à தமிழ்.
இன்னுமோர் ஆதாரமாக, கிரேக்க நாட்டில் வாழ்ந்த சில மக்கள் தங்களை தர்மிலி என்று அழைத்ததைக் கூறலாம். அக்காலத்தில் கிரேக்க நாட்டில் இருந்து இங்கு குடியேறிய மக்கள் இச்சொல்லைக் கொண்டுவந்ததன் மூலமாக தர்மிலி என்ற சொல்லில் இருந்து தமிழ் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழின் தொன்மை:

தொல்காப்பியரின் இலக்கண நூலில் இருக்கும் இலக்கண குறிப்புகள் தமிழின் செழுமையை சுட்டுகிறது. இப்படியான இலக்கண வளம் இருக்க வேண்டுமென்றால், அந்நூல் இயற்றப்படுவதற்குக் குறைந்தது ஐயாயிரம் ஆண்டுகளாக இலக்கியம் இருந்திருக்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க விடயம், ஒரு மொழி தோன்றியதும் உடனேயே இலக்கியங்கள் தோன்றிவிடாது. மொழியின் பிறப்பிற்கும் இலக்கியத்தின் தோற்றத்திற்கும் நூற்றாண்டுகள் இடைவெளி இருக்கும். ஆகவே, தமிழின் வயது குறைந்தது 8000 என்பது தமிழறிஞர் ச. வே. சுப்பிரமணியனின் கருத்து.

உலகிலுள்ள செம்மொழிகளில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது தமிழ். இந்தியாவை எடுத்துக்கொண்டால் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் செம்மொழிகளாகும். ஆனால், தமிழின் சிறப்பு என்பது அதன் தொடர்ச்சி என்று சொல்லலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இலக்கியம், இலக்கணம், கல்வெட்டுகள் என்று தமிழ் மொழி எக்காலத்திலும் அறுபடவில்லை. உலகில் இன்றிருக்கும் மற்ற மொழிகளுக்குக் கிடைக்காத பெருமை இது. இன்றும் கூட, தொல்காப்பியத்திலுள்ள பற்பல சொற்களை, அடிகளை நம்மில் பலரால் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். சங்க இலக்கியமும், நீதி நூல்களும் இன்று வரை கற்கவும் கற்பிக்கவும் படுகின்றன.

இன்றும் உலகெங்கும் தமிழ் மொழி பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகளில் பல்வேறு தரப்பினர் ஈடுபட்டவண்ணமுள்ளனர். கீழடி ஆய்வு இவற்றில் மிகமுக்கியமானது எனக் கருதப்படுகிறது.

சங்கமும் தமிழும்:

பாண்டியர்கள் ஆட்சி புரிந்த்து வந்த காலம் அது. தமிழையும், தமிழரின் வாழ்வியல் நெறிகளான அறம், வீரம், வழிபாடு மற்றும் அனைத்து விதமான கலைகளையும் போற்றும் விதமாக சங்கம் அமைத்து தமிழை வளர்த்தனர். பல நூல்களை இயற்றி, பாடல்கள் பாடி தமிழின் பரிமாணங்களை அதிகரித்தனர். இக்காலகட்டத்தில் தோன்றிய இலக்கியங்களை “சங்க இலக்கியம்” என்று குறிப்பிடுகிறோம். இதில் சுவாரஸ்யமான ஒரு விடயம் என்னவென்றால், சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் நூல்களில் சங்கம் என்ற சொல் எங்கும் இல்லை. கி.மு.9000த்தில் தொடங்கி, கி.பி.200 வரை மூன்று சங்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுவப்பட்டன. இவைதான் தமிழ் இலக்கியத்தில் மிகப் பெரிய பங்காற்றிய சங்கங்கள்.

அதன்பிறகு, சமண சமயத்தவர்கள் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தி தங்கள் சமயத்தைப் பரப்பினார்கள். இதன்பிறகுதான், சங்க இலக்கியம் என்பது வழக்கிற்கு வந்தது. இச்சொல் பயன்படுத்தப்படாவிட்டாலும் சங்கங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் பல்வேறு இலக்கியங்களில் கிடைக்கின்றன. இச்சான்றுகள்ப்படி மூன்று சங்கங்கள் தமிழ் மொழியைச் செழுமைப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு சங்கத்திலும் குறிப்பிட்ட நூல்கள் இலக்கணத்திற்காகப் பின்பற்றப்பட்டுள்ளன. வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இவற்றைப் பயன்படுத்தி இலக்கியத்தைப் படைத்துள்ளனர். தமிழ் என்பது வெறும் கருத்துப் பரிமாற்றம் நடக்கும் மொழியாக அல்லாமல், மனிதரின் வாழ்வியலை அழகியலைப் பேசும் மொழியாக மாற்றியதில் இச்சங்கங்களின் பங்கு மிக முக்கியமானது

தலைச் சங்கம்

பாண்டியர்களின் முதல் தலைநகரமான தென்மதுரையில் கி.மு.9000ல் இயங்கிய இச்சங்கத்தில், அகத்தியர், விரிசடைக் கடவுள், குன்றமெறிந்த முருகவேள் உட்பட 4449 புலவர்கள் இருந்திருக்கின்றனர். காய்சினவழுதி முதல் கடுங்கோன் வரை 89 பாண்டிய அரசர்கள் இதை நடத்தினர். தலைச்சங்கத்தில் அகத்தியம் பின்பற்றப்பட்டது என்ற கருத்து இருக்கிறது. இதை மறுப்பவர்களும் உள்ளனர். தலைச்சங்கத்தில் முதுநாரை, பரிபாடல், முதுகுருகு உள்ளிட்ட நூல்கள் பாடப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல பாடல்களும், தலைச் சங்கம் குறித்த ஆதாரங்களும் கடல்கோளால் அழிந்திருகக் கூடும். தமிழ் மொழியில் அமைந்த முதல் இலக்கண நூலான அகத்தியத்தின் பெரும்பகுதி நமக்குக் கிடைக்கவில்லை என்பது நமக்கான இழப்பு.

இடைச் சங்கம்

தென்மதுரையில் நிகழ்ந்த கடல் கோளிற்குப் பிறகு, கி.மு.4600ல், பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரான கபாடபுரத்தில், இடைச்சங்கம் தொடங்கப்பட்டது. தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம், கலி, குருகு, வெண்டாளி ஆகிய நூல்கள் இயற்றப்பட்ட இச்சங்கத்தில், சிறுமேதாவியார், அகத்தியர், தொல்காப்பியர், மருதநிளநாகனார், நக்கீரர், திரையின் மாறன் உட்பட 3700 புலவர்கள் இருந்தனர். மேலும், வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 59 மன்னர்கள் ஆதரித்தனர். 3700 ஆண்டுகள் இயங்கிய இச்சங்கம், மீண்டும் ஒரு கடற்கோளால் அழிக்கப்பட்டது. இதில் தப்பித்த ஒரே நூல், தொல்காப்பியம்.

கடைச் சங்கம்

தற்போதுள்ள மதுரையில், கி.மு.900ல் தொடங்கப்பட்டு, 1850 ஆண்டுகள் இருந்த கடைச்சங்கத்தை முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 மன்னர்கள் நடத்திவந்தனர். சிறுமாதேவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், இளந்திருமாறன், நல்லந்துவனார், நக்கீரனார் உட்பட 449 புலவர்கள் இச்சங்கத்தில் பாடினர். நாம் இன்றுதிகமாகப் படிக்கும் குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் ஆகியவை இக்காலகட்டத்தில் இயற்றப்பட்டவை.

மன்னன் உக்கிரப்பெருவழுதிக்குப் பின் நிகழ்ந்த அரசியல் குழப்பங்கள், படையெடுப்புகளுக்கு மத்தியில், தமிழை சங்கம் வைத்து யாரும் வளர்க்க முன்வரவில்லை. தமிழ் மொழி போல் பிரிதொரு மொழி காலங்களைக் கடந்து, இயற்கைப் பேரழிவுகளுக்கு அப்பாலும் வளர்க்கப்படவில்லை. ஒரு மொழியின் தொடர்ச்சிநிலை அறுபட்டுப் போனால், அதன் செவ்வியல் தன்மை கெட்டுப்போகும். தமிழ் பல சிக்கல்களைத் தாண்டியும் அறுபடாமல் வந்ததற்கு தமிழறிஞர்களும் புலவர்களும் மன்னர்களும் அரசும் மேற்கொண்ட போராட்டங்களே காரணம்..

செம்மொழியான தமிழ்மொழி :

நம் இலக்கியங்களில் பல இடங்களில் செந்தமிழ் என்ற சொல்லைக் காண முடியும். ஆதியில் இருந்தே தமிழானது செம்மொழியாகவே இருந்து வந்தது. ஆனால், அதை அரசு அங்கீகரிக்க பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. 1865ஆம் ஆண்டில் கால்டுவெல் எழுதிய ஒரு புத்தகத்தில், தமிழ் மொழியின் தொன்மையை நிறுவினார். மு.சு.பூரணலிங்கம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழின் செம்மைத்தன்மை குறித்து வாதிட்டு வெற்றி பெற்றார். பரிதிமாற்கலைஞர் தமிழைச் செம்மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று 1902ஆம் ஆண்டில் கோரிக்கை விடுத்தார். 1918ஆம் மறைமலை அடிகள் தலைமையில் நடந்த சித்தாந்த மாநாடு, 1919களில் கரந்தைத் தமிழ்ச்சங்கம், 1995ல் உலகத்தமிழ் மாநாடு, 1998 மற்றும் 2002ல் தமிழக அரசு இதே கோரிக்கையை மீண்டும் மீண்டும் முன்வைத்தது. இறுதியாக, 2004ஆம் ஆண்டில், அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்த போது, தமிழ்ச் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

ஒரு மொழி செம்மொழியாவதற்குப் பதினோறு கூறுகள் அவசியம். இவற்றில் ஏழு கூறுகளுக்கு மேல் பொருந்தினால் செம்மொழிக்கான அந்தஸ்த்தினை பெற்றுக்கொள்ளும்.

தொன்மை
தனித்தன்மை
பொதுமைப்பண்பு
நடுவுநிலைமை
தாய்மைத்தன்மை
பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு
பிறமொழித் தாக்கமில்லா தன்மை
இலக்கிய வளம்
உயர்சிந்தனை
கலை இலக்கியத் தனித்தன்மை
மொழிக்கோட்பாடு
தமிழ் மொழி முதலில் இருந்தே இவை அனைத்திற்கும் உட்பட்ட மொழி. உலகில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏழு செம்மொழிகளில் தமிழ் மொழிக்கு மாத்திரமே இந்த பதினோரு கூறுகளும் பொருந்தியிருக்கின்றன. நம் இலக்கியங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கணத்தைப் பின்பற்றி மட்டுமே எழுதப்படுகின்றன. அதனால்தான், பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தும் சிதிலமடையாமல் தமிழ் தன்னை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் பல்லாயிரம் வருடம் கடந்தும் தமிழ் வாழும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *