முன்னாள் அமைச்சரின் சகோதரர் கைது

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் கைது…
உண்மை நிலை என்ன?

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், நேற்று  (22) தனது சட்டத்தரணி  காலிங்கா இந்திரதிஸ்ஸவுடன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலானாய்வு திணைக்களத்துக்கு விசாரணைக்கு சென்ற போது, கைது செய்யப்பட்டு,  எதிர்வரும் பெப்ரவரி ௦6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

றிப்கான் பதியுதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய்யாகும் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (23) அவர், கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரது சட்டத்தரணி, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், உண்மை நிலையை தெரிவித்த போது, நீதவானும் அவரது தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

2015 காலப்பகுதியில் நடைபெற்றிருந்த இந்த வழக்கு விவகாரம் 2017 இல் சமரசம் மூலம் தீர்க்கப்பட்டிருந்தமையையும் ரிப்கான் பதியுதீனின் சத்தரணி எடுத்துக்கூறினார்.

எனினும், இதற்கு முன்னர் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு றிப்கான் பதியுதீன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த போது, அவர் விசாரணைக்கு வருகை தராமையினை காரணங்காட்டி, இன்று பிணை வழங்க வேண்டாம் என பொலிஸாரினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

“அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு உண்மை வெளிவரும் போது, அவர் நிரபராதி என தெரியவரும். சுமார் 05 வருடங்களுக்கு முன்னர், அவர் மீது சோடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த முறைப்பாடு, தற்போது மீண்டும் கிளரப்பட்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது உண்மையிலேயே ஒரு அரசியல் பழிவாங்கல்” எனவும் அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *