பலரின் தூக்கத்தை சீர்குலைத்த ரஞ்சன்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி கலந்துரையாடல்கள் அடங்கிய 5 இறுவெட்டுக்களை பாராளுமன்றத்தில் இன்று மாலை சமர்ப்பித்துள்ளார்.

முன்னதாக, அவர் கூறியவாறு குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தாரா என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் ரஞ்சன் ராமநாயக்க தன்னிடம் குரல் பதிவுகள் இருப்பதாக தனது பெயரையும் கூறி உரையாற்றியதாகக் குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர, குரல் பதிவு சாட்சியங்களை அவர் சமர்ப்பித்தாரா என்பதை அறிய விரும்புவதாகக் கூறினார்.

இதற்கு பதிலளித்த ரஞ்சன் ராமநாயக்க, ஒலிப்பதிவுகளை வங்கியொன்றின் லாக்கரில் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இன்றைய நாளுக்குள் அரசாங்கத்திற்கு பாதகமான இறுவெட்டுக்களை மாலை 6 மணிக்கு முன்னதாகக் கையளிப்பதாகக் குறிப்பிட்டார்.

அவர் கூறியவாறு, 5 இறுவெட்டுக்களை பாராளுமன்றத்தில் இன்று மாலை சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.

இறுவெட்டுக்களை பரிசீலித்த போது, அவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் இதனுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க அரசாங்கத்தின் ஒரு ஒப்பந்தக்காரர் என்பது இதன் மூலம் தெரிவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் பதிவு தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியதைப் போன்று, நாட்டு மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலை, நிவாரணம் வழங்கப்பட்டாலும் தொடர்ந்தும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமை, விவசாயிகள் எதிர்நோக்கும் பாரிய சவால்கள் என்பன அவற்றில் சிலவாகும்.

அத்துடன், பொதுமக்களின் பணம் சூறையாடப்பட்ட முறிகள் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட 5 தடயவியல் கணக்காய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்திற்கும் மேலதிகமாக நான்கு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட கடனை இந்த வருடம் செலுத்த வேண்டிய பாரிய சவாலையும் அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்தால் அதன்மூலம் சர்வதேச அழுத்தங்கள் இலகுவில் நாட்டிற்குள் ஆதிக்கம் செலுத்தலாம் என்பது புலப்படாத பாரதூரமான நிலைமையாகும்.

இவ்வாறான பாரிய பிரச்சினைகள் நாட்டில் இருக்கும் பொழுது, நாட்டின் பாராளுமன்ற அமர்வின் பெறுமதியான நேரம், குரல் பதிவுகளுக்காக செலவு செய்யப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *