13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் கோரிக்கையை தூக்கிக் கடாசினார் கோட்டா! – மோடி கோரி 24 மணிநேரத்திலேயே புதுடில்லியில் வைத்தே நிராகரிப்பு

தமிழர்களின் வேணவாக்களைப் பூர்த்தி செய்வதற்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை கோட்டாபாய அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்த நிலையில், மறுநாள் சனிக்கிழமையே அந்தக் கோரிக்கையை இந்தியாவில் வைத்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

“13ஆவது திருத்தம் அரசமைப்பின் ஒரு பகுதியாகும். பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட சில பகுதிகளைச் செயற்படுத்த முடியாது. அதற்கான மாற்று வழிகளைப் பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ச, அந்த நாட்டு ஊடகமான ‘த ஹிந்து’ நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

‘இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதானம், மதிப்பு ஆகியவை குறித்த வேணவாக்களை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையை புதிய அரசு முன்னெடுக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். அதில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியம்’ என்று புதுடில்லியில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார். இந்தநிலையிலேயே மேற்படி கருத்தை ‘த ஹிந்து’ நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

‘அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுகள் அல்லது தமிழ்ப் பெரும்பான்மை பகுதிகளுக்கான உரிமைகள் தொடர்பான அரசமைப்பின் 13ஆவது திருத்தம் குறித்து உறுதியளிக்க முடியுமா?’ என்று கோட்டாபயவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “அரசமைப்பின் 13ஆவது திருத்தம் என்பது அரசமைப்பின் ஒரு பகுதியாகும். இதை முழுமையாகச் செயற்படுத்த முடியாது. குறிப்பாக பொலிஸ் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவது போன்ற சில பகுதிகளைத் தவிர, அதை நாங்கள் செயற்படுத்த முடியாது. அதற்கான மாற்று வழிகளைப் பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

‘வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கடந்த வார இலங்கைப் பயணத்துக்குப் பின்னர், இந்திய அரசு தமிழர்களுக்கு நீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த விடயம் தொடர்பாக உங்கள் எதிர்வினை என்ன?’ எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “எனது அணுகுமுறை, நான் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கூறியது போல், தமிழர்களுக்கு வளர்ச்சியையும், சிறந்த வாழ்க்கையையும் கொடுப்பது மிகவும் முக்கியமானது.

சுதந்திரங்கள் மற்றும் அரசியல் உரிமைகளைப் பொறுத்தவரை அரசமைப்பில் ஏற்கனவே விதிகள் உள்ளன. ஆனால், தொழில்வாய்ப்பு மூலமாகவும், மீன்வளம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலமாகவும் இலங்கையிலுள்ள மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகின்றது.

அரசியல் பிரச்சினைகளை நாம் விவாதிக்க முடியும். ஆனால், 70 ஆண்டுகளாக, அடுத்தடுத்த தலைவர்கள் ஒரே ஒரு விடயத்தை உறுதியளித்துள்ளனர். அதாவது அதிகாரப் பகிர்வு குறித்து அவர்கள் உறுதியளித்துள்ளனர். ஆனால், இறுதியில் எதுவும் நடக்கவில்லை.

பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்வுக்கும் எதிராக எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகின்றேன். பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர். தமிழர் பகுதியை அபிவிருத்தி செய்யாதீர்கள் அல்லது வேலை கொடுக்க வேண்டாம் என்று எந்தச் சிங்களரும் சொல்லமாட்டார்கள். ஆனால், அரசியல் பிரச்சினைகள் வேறு. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சி குறித்த எனது வேலைகளைப் பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *