ராஜபக்சக்களின் அரசியல் பழிவாங்கலையடுத்து சி.ஐ.டி. அதிகாரி நிஷாந்த சில்வா குடும்பத்துடன் சுவிஸில் தஞ்சம்!

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான அவன்ட் கார்ட் வழக்கு, ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ள வசீம் தாஜுதீன் கொலை வழக்கு, லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட ஊடகவியலாளர் படுகொலைகள், யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட நாட்டின் முக்கிய குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா, தனது குடும்பத்துடன் சுவிற்சர்லாந்துக்குப் பயணமாகியுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தின் அனுமதி பெறாது, தனது பாதுகாப்பு நலன் கருதி அவர் வெளிநாடு சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா, தனது குடும்பத்துடன் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நேற்றுப் பயணமானார் என்று தெரிவிக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் விசாரணை அலகின் பொறுப்பதிகாரியான நிஷாந்த டி சில்வா, முக்கியமான பல வழக்குகளின் விசாரணை அதிகாரியாகச் செயற்பட்டு வந்தார்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்கள் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான நிஷாந்த டி சில்வா முன்னெடுத்து வந்தார்.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என 13 கடற்படை அதிகாரிகளைக் கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்தினார். சுன்னாகம் பொலிஸ் தடுப்பில் சுமணன் என்ற சந்தேகநபர் சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்திருந்தார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை குறித்தும் இவரே புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்குரிய தண்டனையைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

மஹிந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட ஊடகவியலாளர் படுகொலைகள் மற்றும் கீத் நொயார், உபாலி தென்னக்கோன், நாமல் பெரேரா உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான அவன்ட் கார்ட் வழக்கு, ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ள வசீம் தாஜுதீன் கொலை வழக்கு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளின் விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபயசேகரவின் கீழ் பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா முன்னெடுத்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச – மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு பதவியேற்ற கையோடு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபயசேகர சில தினங்களுக்கு முன்னர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு தெற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா குடும்பத்துடன் நேற்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ராஜபக்சக்களின் அரசியல் பழிவாங்கலையடுத்தே நிஷாந்த டி சில்வா குடும்ப சகிதம் சுவிஸில் தஞ்சமடைந்துள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *