13 விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ்க் கட்சிகளுடன் பேச நான் தயாரில்லை! – கோட்டா விசேட செவ்வி

“வடக்கில் தமிழ்க் கட்சிகள் தயாரித்துள்ள 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் அந்தக் கட்சிகளுடன் பேச்சு நடத்தமாட்டேன். அதில் எந்தப் பயனும் இல்லை. நான் யதார்த்தத்தையே பேசுவேன். இந்த 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களைச் சந்திப்பதற்குக் கூடத் தயார் இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்குப் பதிலளிக்கத் தயார். அப்படியாயின் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துப் பேசலாம்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

“ஆனால் 13 விடயங்கள் தொடர்பில் பேசமாட்டேன். இதனைத் தெளிவாக எழுதுங்கள். இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களைப் பேசுவதற்குத் தயார் இல்லை. ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன? என்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டால் அதற்கு நான் பதிலளிக்கத் தயாராக இருக்கின்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அந்தச் செவ்வியின் முழு விபரம் வருமாறு:-

கேள்வி:- கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் 5 தமிழ்க் கட்சிகள் இணைந்து 13 அம்சக் கோரிக்கைகளை தயாரித்து ஓர் ஆவணத்தை கைச்சாத்திட்டுள்ளன. அது தொடர்பில் உங்கள் தரப்புடனும் அவர்கள் பேச்சு நடத்தவுள்ளனர். நீங்கள் தயாரா?

பதில்:- அந்த 13 விடயங்கள் அடிப்படையாகக் கொண்டு நான் அந்தக் கட்சிகளுடன் பேச்சு நடத்த மாட்டேன். அதில் எந்தப் பயனும் இல்லை. இதுதான் இந்த நாட்டின் பிரச்சினை. இப்படித்தான் மக்களை ஏமாற்றுகின்றனர். இந்த 13 விடயங்கள் குறித்து பேசி பயனுள்ளதா? வடக்கு, கிழக்கை இணைக்கக் கோருகின்றனர். ஒற்றையாட்சியை நீக்குமாறு கோருகின்றனர். இவற்றைச் செய்ய முடியுமா? யாராலும் செய்ய முடியாது. கடந்த 72 வருடங்களாக இதனையே செய்து வருகின்றனர். தற்போதும் இதனையே செய்ய முயற்சிக்கின்றனர். இதுவொரு பொய் முயற்சி. நான் யதார்த்தத்தையே பேசுவேன். இந்த 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களைச் சந்திப்பதற்குக் கூடத் தயார் இல்லை.

பிரச்சினைகளுக்குத் தீர்வு என்னவென்று கேட்டால் அதற்குப் பதிலளிக்கத் தயார். அப்படியாயின் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்துப் பேசலாம். ஆனால், 13 விடயங்கள் தொடர்பில் பேசமாட்டேன். இதனைத் தெளிவாக எழுதுங்கள். இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களைப் பேசுவதற்குத் தயார் இல்லை. ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன? என்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டால் அதற்கு நான் பதிலளகிக்கத் தயாராக இருக்கின்றேன்.

கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள ஹிஸ்புல்லாவை நீங்கள்தான் களமிறக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இது உண்மையா?

பதில்:- அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவ்வாறான எந்த முயற்சியையும் நான் செய்யவில்லை.

கேள்வி:- ஆறுமுகன் தொண்டமான் உங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா பிரச்சினைக்கு உங்கள் பதில் என்ன ?

பதில்:- 1000 ரூபாவைவிட பாரிய திட்டம் ஒன்றை நாங்கள் முன்னெடுப்போம். தொண்டமான் முன்வைத்துள்ள 32 அம்சக் கோரிக்கைகள் தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அவை முக்கியமானவையாகும். கல்வி, பல்கலைக்கழகம், தொழிற்பயிற்சி போன்ற முக்கிய விடயங்கள் உள்ளன. இன்று ஒருவருக்கு 1000 ரூபா கிடைக்காவிடின் என்ன செய்யலாம்? நான் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களிடம் கேட்டேன். அவர்கள் ஆயிரம் ரூபா வழங்க முடியும் என்று கூறினார்கள். அவர்கள் மேலும் பல பங்கு இலாபத் திட்டங்களையும் முன்வைக்கின்றனர். நான் இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்திருக்கின்றேன். ஆனால், 1000 ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்பேன். ஆயிரம் ரூபா கூட இல்லாமல் ஒரு மனிதனால் வாழமுடியுமா?

கேள்வி:- கோட்டாபய ராஜபக்சவுக்கு தமிழ், முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது எனக் கூறப்படுகின்றதே?

பதில்:- எனக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகமாக வாக்களிப்பார்கள். நான் மொத்தமாக 62 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவேன்.

கேள்வி:- இராணுவத்துக்குத் தலைமை வகிக்கவில்லை என்று கூறினீர்கள். உண்மையில் என்ன நடந்தது?

பதில்:- நான் கூறியது உண்மைதான். குறித்த அந்த ஊடகவியலாளர் இராணுவத்துக்கு நான் தலைமை வகித்தேன் என்று கூறினார். நான் இராணுவத்துக்குத் தலைமை வகிக்கவில்லை. என்னால் இராணுவத்துக்குத் தலைமை வகிக்க முடியாது. இராணுவத்தை இராணுவத் தளபதியும் கடற்படையை கடற்படைத் தளபதியும் விமானப்படையை விமானப்படைத் தளபதியும் பொலிஸாரை பொலிஸ்மா அதிபரும் வழிநடுத்துவார்கள். நான் அனைத்துத் தரப்பினரையும் இயக்கினேன். எனது நுட்பங்கள் செயற்படுத்தப்பட்டன.

உதாரணமாக இராணுவத் தளபதியினால் ஓர் இராணுவ வீரரைக் கூட மேலதிகமாக நியமிக்க முடியாது. அதற்கு ஒரு காரணம் உள்ளது. இராணுவத் தளபதிக்குத் தான் நினைத்த மாத்திரத்தில் வீரர்களை அதிகரிக்க முடியும் என்றால் அவர் இலட்சக்கணக்கில் இராணுவத்துக்கு மக்களைச் சேர்த்து அரசாங்கத்தை கைப்பற்றி விடுவாரே.

இராணுவத் தளபதிக்கு அப்படிச் செய்ய முடியாது. ஜனாதிபதிக்கு அதனைச் செய்ய முடியும். நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தேன். இதனை இவர்கள் புரிந்துகொள்வில்லை. நான் இராணுவத்துக்கு தலைமை வகிப்பதாக கூறியிருக்கலாம். ஆனால், அது தவறு. நான் செயலாளராக பாதுகாப்பு படைகளுக்கு பொறுப்பாக இருந்தேன்.

கேள்வி:- நீங்கள் அதிகாரத்துக்கு வந்தால் புதிய அரசமைப்பு கொண்டு வரப்படுமா?

பதில்:- நாட்டுக்கு ஒரு புதிய அரசமைப்பு தேவைப்படுகின்றது. தற்போதைய அரசமைப்பில் பல திருத்தங்களை மேற்கொண்டு இதனைக் குழப்பியிருக்கின்றனர். அழித்து இருக்கின்றனர். எனவே, புதிய அரசமைப்பைக் கொண்டு வருவது நல்லதாகும்.

கேள்வி:- ஐ.நா. தீர்மானத்தை நிராகரிப்பதாக ஏன் கூறுகின்றீர்கள்?

பதில்:- அது ஒரு பக்கத் தகவல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கேள்வி:- அரசும் சேர்ந்துதான் இந்தத் தீர்மானத்தைத் தயாரித்துள்ளது?

பதில்:- அது தவறு. இந்தப் பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடியும். பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பாத எதையும் செய்ய முயற்சித்தால் அதில் சிக்கல் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அதுதான் யதார்த்தம். ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் புதிய விடயங்களை மேற்கொள்வோம். ஆனால், ஐ.நா. நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். அமெரிக்க இந்தப் பேரவையிலிருந்து விலகி விட்டது. அவர்கள்தான் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள்.

கேள்வி:- நீங்கள் ஜனாதிபதியானதும் பிரதமரை உடனடியாக மாற்றுவீர்களா?

பதில்:- நாம் பதவிக்கு வந்ததும் புதிய அரசு அமைய வேண்டும். அதுதான் மக்களின் பிரார்த்தனை. தற்போதைய அரசுக்கும் பெரும்பான்மை இல்லை. எனவே, மக்கள் நம்புகின்ற ஒரு பிரதமரை நான் நியமிக்க வேண்டிவரும்.

கேள்வி:- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தங்களை ஆதரவளித்தாலும். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளாரே?

பதில்:- அவர் தற்போது அரசியலில் இல்லை. நான் அவருடன் பேசுவதில்லை.

கேள்வி:- நீங்கள் சீனாவுடன் நெருங்கி இருப்பதாகக் கூறப்படுகின்றதே?

பதில்:- அது முற்றிலும் பொய்யானது. நாம் இந்தியாவுடன் பணியாற்றும்போது இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கின்றது என்று நாம் பார்ப்பதில்லை. எமது ஆட்சியில் நாங்கள் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றினோம். முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் தெரிவுகள் என்று ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார். அதனை வாசித்தால் நாம் இந்தியாவுடன் எவ்வாறு பணியாற்றினோம் என்று புரிந்துகொள்ள முடியும்.

சிவ்சங்கர் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராவும் இருந்தார். அவர் திறமையான ஒரு அதிகாரி.

கேள்வி:- உங்கள் அரசில் பஸில் ராஜபக்ஸவின் வகிபாகம் என்ன?

பதில்:- தற்போது அவர் எம்.பி. கூட இல்லை. ஆனால், அவர்தான் கட்சியை வழிநடத்தி நுட்பங்களை மேற்கொண்டு வருகின்றார். அரசியல் ரீதியில் செயற்படுகின்றார். அவர் எமக்கு ஆலோசகராக இருந்தால் அவரைப் பயன்படுத்துவோம்

கேள்வி: இறுதிப் போரின்போது புலித் தலைவர்கள் சரணடைந்தனர் என்று கூறப்படுகின்றதே?

பதில்:- வெள்ளைக்கொடி ஏந்தி வந்ததை எங்காவது காணொளியில் பார்த்துள்ளீர்களா? அதிகாலை நான்கரை மணிக்கே வருபவர் யார் என்று கூடத் தெரியாது. பிரபாகரனின் தாய், தந்தையரை நாம் காப்பாற்றினோம். ஆனால், அவர்கள் பிரபாகரனின் பெற்றோர்கள் என எமக்குத் தெரியாது. பொட்டு அம்மான் எவ்வாறு இருந்தார் என யாருக்கும் தெரியாது. ஓர் இராணுவ வீரருக்கு பொட்டு அம்மான் யார் என்று தெரியுமா? பொட்டு அம்மானை என்னால் கூட அடையாள காண முடியாது. பிரபாகரனை கூட அடையாளம் காண முடியாது. அதனால்தான் பிரபாகரனை அடையாளம் காண அங்கு கருணாவை அனுப்பினோம்.

கேள்வி:- இவ்வாறு விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைய வருவதாக சர்வதேச தகவல் ஏதும் உங்களுக்கு வந்ததா?

பதில்:- அவ்வாறு எதுவும் வரவில்லை.

கேள்வி:- தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் உங்கள் தீர்வு என்ன?

பதில்:- அரசியல் கைதிகள் என்று கூறமுடியாது. சிறைக் கைதிகளே உள்ளனர். இன்னும் 200 பேர் அளவிலேயே இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். நான் அது தொடர்பில் திட்ட முறைமையைத் தயார்படுத்தி இருந்தேன். நாங்கள் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தினோம். இந்த 200 பேர் விடயத்திலும் அந்தத் தீர்வுக்குச் செல்ல முடியும்.

கேள்வி:- நீங்கள் ஆட்சிக்கு வந்தால் குறித்த 200 பேர் அளவில் தமிழ்க் கைதிகளுக்குப் புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்த முடியும் என உறுதி வழங்க முடியுமா?

பதில்:- 200 பேர் தொடர்பிலும் என்னால் உறுதி வழங்க முடியாது. சிலர் பாரிய குற்றச் செயல்களைச் செய்தவர்கள். அவர்களில் சிங்களவர்களும் உள்ளனர். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமல் உள்ளவர்களை நாம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தலாம். லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் வெடி வைத்தவர் விடுதலையாகி விட்டாராம். ஆனால், மரக் கிளைகளை வெட்டியவர் இன்னும் தடுப்பில் உள்ளாராம்.

அதாவது கதிர்காமர் மீது வேறு ஒரு வீட்டில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக்கள் நடத்தப்பட்டன. அங்கு மரத்தில் ஒரு கிளை இருந்துள்ளது. எனினும் அந்தக் கிளை கதிர்காமரின் வீட்டை மறைத்துள்ளது. அப்போது பொதுவாக வீதிகளில் மரக்கிளைகளை வெட்டும் ஒருவர் இந்த மரக்கிளைகளையும் வெட்டியிருக்கின்றார். அவர் அதனை வெட்டியதனால் தான் அந்த இடம் தெளிவாகத் தெரிந்திருக்கின்றது. அந்தக் கிளையை வெட்டியவர் இன்னும் சிறையில் இருக்கின்றார். எனவே குற்றம் நிரூபிக்கப்படாத அல்லது வழக்குத் தாக்கல் செய்யப்படாத தமிழ் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூகமயப்படுத்தலாம். இவை மனிதாபிமான விடயங்கள். இவற்றை மனிதாபிமான ரீதியாக முன்னெடுக்கலாம்.

நேர்காணல்:- ரொபட் அன்டனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *