ஜனாதிபதித் தேர்தலில் ஓரணியில் செயற்படுவதற்கு 5 தமிழ்க் கட்சிகள் இணக்கம்! – முரண்டுபிடித்து வெளியேறியது முன்னணி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து முன்வைப்பதற்கான பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் இன்று கையெழுத்திட்டன. ஆயினும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை. அந்தக் கட்சி முரண்பட்டுக்கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேறியது.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர் ஒன்றியங்கள் ஏற்பாட்டில் யாழில் இன்று நடைபெற்ற இறுதிச் சந்திப்பின்போதே இந்தப் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டது. இந்தக் கலந்துரையாடல் 5 கட்டங்களாக நடைபெற்றிருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அநுரகுமார திஸாநாயக்கா ஆகிய பிரதான வேட்பாளர்களிடம் தமிழர் தரப்பின் கோரிக்கைகளைக் கூட்டாக முன்வைத்து பேரம் பேசுவது என இந்தப் பொது இணக்கப்பாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய பொது இணக்கப்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் 5 தமிழ்க் கட்சிகள் கையொப்பமிட்டன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரெலோ சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் பொதுச்செயலாளர் நாயகமும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

இன்றைய சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்க போதிலும் அது இடைநடுவில் ஏற்பாட்டாளர்களுடன் முரண்பட்டுக் கொண்டு வெளிநடப்புச் செய்தது. அத்துடன், தமது கோரிக்கை ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்து அந்தக் கட்சி பொது இணக்கப்பாடு ஒப்பந்தத்திலும் கையொப்பமிட மறுத்தது.

ஆவணத்தில் உள்ளவை வருமாறு:

5 தமிழ்க் கட்சிகள் கையெழுத்திட்ட பொது இணக்கப்பாடு ஆவணத்தில் உள்ளக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:-

* புதிதாக உருவாக்கப்படும் அரசமைப்பு ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறைமையின் கீழ் இலங்கையின் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

* இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கு முழுமையான பக்கச்சார்பற்ற சர்வதேச பொறிமுறைகளான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்தேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

* பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும்.

* தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

* வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

* வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அந்தக் காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

* வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

* வடக்குக்கு மகாவலி நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.

* அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப்பிரதேசத்தில திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

* தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டு தல ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட திணைக்களங்கள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பிரகடனங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

* போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் மற்றும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

* வடக்கு – கிழக்குக்கான அரச மற்றும் தனியார் துறைகளின் வேலை வாய்ப்புக்களில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

* வடக்கு கிழக்கைப் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியைக் கையாள்வதற்கு வடக்கு, கிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்குதல் வேண்டும்.

மேற்கூறிய கோரிக்கைகளில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து புதிய ஜனாதிபதி பதவியேற்று மூன்று மாத காலப் பகுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *