வெற்றி நிச்சயம்! – மஹிந்த, கோட்டா சூளுரை

“ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை நிச்சயம் கைப்பற்றுவோம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுப் பத்திரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“வெற்றிகரமாக வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் எழுந்த அனைத்துச் சவால்களையும் சட்டவாயிலாகவே வெற்றி கொண்டுள்ளோம்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஆசீர்வாதத்துடனே வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசின் கடந்த நான்கரை வருட நிர்வாகத்தை அடிப்படையாகக்கொண்டே நாட்டு மக்கள் அரசியல் ரீதியான தீர்மானத்தை நவம்பர் 16ஆம் திகதி எடுப்பார்கள்.

தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் எவ்வித மறுப்பும் இன்றி இணக்கம் தெரிவித்துள்ளோம்.

சுயாதீனமான முறையில் தேர்தல் இடம்பெற்றால் மாத்திரமே நாட்டு மக்கள் தமக்கான தலைவரைத் தெரிவு செய்வார்கள்.

எந்தநிலையிலும், ஜனநாயகத்துக்கு எதிராகச் செயற்பாடுகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்காது.

எமது ஆட்சியில் அபிவிருத்திகள் உட்பட அனைத்துத் துறைகளும் பலப்படுத்தப்படும். அனைவரினதும் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்” – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *