சமல், வெல்கம உட்பட 6 பேர் பின்வாங்கினர்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணம் செலுத்திய 6 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

கட்டுப்பணம் செலுத்திய 41 வேட்பாளர்களில் 6 பேர் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவில்லை.

சமல் ராஜபக்ச, குமார் வெல்கம, சிறிதுங்க ஜயசூரிய, ஜயந்த லியனகே, மஹிபால ஹேரத், பஷீர் சேகுதாவூத் ஆகியோரே போட்டியில் இருந்து விலகியவர்களாவர்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படாத நிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக, ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் சார்பில் போட்டியிடுவதற்காக சமல் ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை கட்டுப்பணம் செலுத்தியிருந்தார்.

பிரஜாவுரிமை விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, கோட்டாபய ராஜபக்சவுக்கான நெருக்கடி தீர்ந்திருந்தது. எனினும், அவருக்கு சட்ட நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என்பதால், ஏற்கனவே கட்டுப்பணம் செலுத்தியிருந்த சமல் ராஜபக்சவும் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது.

எனினும், இன்று சமல் ராஜபக்ச தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யவில்லை.

கோட்டாபய ராஜபக்ச வேட்புமனுவை இன்று தாக்கல் செய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வாகனத்தில் வந்தபோது அவருடன் சமல் ராஜபக்சவும் வருகை தந்திருந்தார்.

தான் போட்டியிடவில்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்னரே தெரியப்படுத்திவிட்டேன் என்று அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுவதற்குக் கட்டுப்பணம் செலுத்தியிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்காக இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வரவில்லை.

இந்தநிலையில், குமார வெல்கமவின் பேச்சாளரான சட்டவாளர் ராஜித் கொடிதுவக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக, ஊடகவியலாளர்களிடம் பேசியபோது, “ஜனாதிபதித் தேர்தலில் குமார் வெல்கம போட்டியிடமாட்டார். அதனால்தான் வேட்புமனு இன்று தாக்கல் செய்யப்படவில்லை. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாம் அறிவித்துவிட்டோம்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *