திருமணத்துக்காகப் பதவி உயர்த்தப்பட்டார் யோஷித!

இலங்கைக் கடற்படையில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வன் யோஷித ராஜபக்ச, திருமணத்துக்காக லெப்.கொமாண்டராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

சி.எஸ்.என். தொலைக்காட்சி நிதி முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து, இலங்கைக் கடற்படையில் இருந்து கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி தொடக்கம் லெப். யோஷித ராஜபக்ச இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

ஆனால், அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்சவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்திய சந்திப்பை அடுத்து, பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட அதே நாளில் இருந்து லெப். யோஷித ராஜபக்சவை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள கடற்படைத் தளபதிக்கு உத்தரவிடப்பட்டது.

இதற்கமைய அவரை மீண்டும் கடற்படையில் சேர்த்துக்கொள்ளும் ஆணையில் கடந்த 24ஆம் திகதி இலங்கைக் கடற்படைத் தளபதி கையெழுத்திட்டார்.

லெப். யோஷித ராஜபக்ச தனது திருமணத்தின்போது கடற்படை சீருடையுடன் பங்கேற்க விரும்புவதால், அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ச கோரியிருந்தார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், யோஷித ராஜபக்சவின் திருமணம் நேற்று நடைபெற்றது.

இதற்கு முன்னதாக யோஷித ராஜபக்ச நேற்று லெப்.கொமாண்டராக தற்காலிகமாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்திருந்தார்.

இவரது பதவி உயர்வுக்கு பாதுகாப்பு அமைச்சு அங்கீகாரம் அளித்துள்ளது என்றும், தகுதிகாண் பரீட்சையில் சித்தி பெற்ற பின்னர் அவர் நிரந்தரமாக லெப்.கொமாண்டராகத் தரமுயர்த்தப்படுவார் என்றும் அவர் கூறினார்.

திருமணத்தின்போது, லெப்.கொமாண்டருக்கான பட்டியுடன் கூடிய கடற்படைச் சீருடையையே யோஷித ராஜபக்ச அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல வர்த்தகர் ஆனந்த ஜயசேகரவின் புதல்வியான நிதீஷாவைக் கரம் பிடித்த யோஷிதவின் திருமணம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடந்தது. அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் உட்படப் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *