சஜித் வேட்பாளர்! ரணில் தலைவர்!! – அரசமைப்பு மறுசீரமைப்பு உட்பட ஐ.தே.க. மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைக் களமிறக்குவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த முடிவுக்கு கட்சியின் விசேட மாநாட்டில் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெற்றது.

இதன்போதே ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தின் பெயரை முன்மொழிந்து அனுமதியைக் கோரினார் கட்சித் தலைவரான பிரதமர் ரணில். இதற்கு ஏகமனதாக அங்கீகாரம் கிடைத்தது.

அத்துடன், அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல், தேர்தல் முறைமையில் சீர்திருத்தம் செய்தல், பிரதமரின் இணக்கப்பாட்டுடன் அமுலாகும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவி போன்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசால் ஆரம்பிக்கப்பட்ட அரசமைப்பு மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்தல், கட்சித் தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு கட்சி செயற்குழு எடுத்த தீர்மானத்தை கட்சி மாநாடு மீண்டும் உறுதி செய்கின்றது உட்பட 6 தீர்மானங்கள் ஐ.தே.கவின் மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதலாவது பிரேரணையைக் கட்சித் தலைவர் ரணில் முன்மொழிந்தார். அதனை நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் வழிமொழிந்தார்.

ஏனைய பிரேரணைகளை கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முன்மொழிந்தார். அவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் வழிமொழிந்தார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *