ரணில் – கூட்டமைப்பு இன்று அவசர பேச்சு!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீண்ட இழுபறியின் பின்னர் சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், அந்தக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையிலான அவசர சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

எதற்காக இந்த அவசர சந்திப்பு இடம்பெறுகின்றது என்பது தொடர்பில் எந்தத் தகவலும் தெரியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதால், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று அறியமுடிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற சகல தரப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தத் தயார் என்று திரும்பத் திரும்பக் கூறிவருகின்ற நிலையில், ரணில் விக்கிரமசிங்க இந்தச் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் எழுத்துமூல உடன்பாட்டை மேற்கொள்ள முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அறிவித்திருந்தார். அவர் அவ்வாறு உடன்பாட்டுக்கு மறுத்தால் அவரை ஆதரிப்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகவே கூறவுள்ளது.

இன்றைய சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலோ அல்லது சஜித் பிரேமதாஸ கலந்துகொண்டாலோ இந்த விடயத்தை நேரடியாகக் கூறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முடிவு செய்துள்ளது.

“கடந்த தடவை ஆதரிக்கும்போது எழுத்துமூல உடன்பாடு மேற்கொள்ளப்படவில்லை. அது சரியான முடிவு. அப்போது அப்படியொரு நிலைமை இருந்தது. அவ்வாறு எழுத்துமூல உடன்பாடு மேற்கொள்ளப்படாதது இப்போதும் சரியான முடிவு. ஆனால், நிலைமை இப்போது வேறு. புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் எங்களின் நிலைப்பாடு என்ன என்பது நாட்டுக்கே முழுமையாகத் தெரியும். புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் எவ்வளவோ விடயங்களில் நாங்கள் விட்டுக் கொடுத்துள்ளோம். இதற்காக எமது மக்களின் எதிர்ப்பையும் நாம் சம்பாதித்துள்ளோம். இவ்வாறான நிலைமையில் எங்களுடன் உடன்பாடு செய்து கொள்வதும் அதனைச் சிங்கள மக்களிடம் சொல்வதும் பிரச்சினைக்குரியதாக இருக்காது” என்று இன்றைய சந்திப்பில் கூட்டமைப்பு சுட்டிக்காட்டும் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *