வல்லிபுர ஆழ்வாருக்கு இன்று கொடியேற்றம்! – ஒக்டோபர் 12ஆம் திகதி தேர்

சரித்திரப் பிரசித்திபெற்ற வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 17 தினங்கள் இடம்பெறும்.

7ஆம் திருவிழாவான எதிர்வரும் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 13ஆம் திருவிழாவான 10ஆம் திகதி வரை விசேட உற்சவங்களான குருக்கட்டு தரிசனம், வெண்ணெய்த் திருவிழா, துகில் திருவிழா, பாம்புத் திருவிழா, ஹம்சன் போர்த் திருவிழா, வேட்டைத் திருவிழா ஆகிய சிறப்பு உற்சவங்கள் நடைபெறும்.

11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு சப்பரத் திருவிழாவும், 12ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு தேர்த் திருவிழாவும், 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வங்காள விரிகுடாக் கடலில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவும், 14ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு கேணித் தீர்த்தத் திருவிழாவும் மாலை 4 மணிக்கு களஞ்சல் திருவிழாவும் மாலை 6 மணிக்கு கொடி இறக்கமும் இடம்பெறுவதுடன் பெருந்திருவிழா நிறைவுபெறும்.

உற்சவ காலங்களில் ஆலய சூழலில் உள்ள அன்னதான மடங்களில் அன்னதானம் வழங்கப்படும். பக்தர்கள் சமயக் கோட்பாடுகளுடன் கலாசாரத்துக்கு அமைவான உடைகளுடன் தங்க ஆபரணங்கள் அணிவதைத் தவிர்த்து வருமாறு கேட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை – மந்திகை ஊடாக வல்லிபுரக் கோயில், பருத்தித்துறை – தும்பளை ஊடாக வல்லிபுரக் கோயில், பருத்தித்துறை வல்லிபுரக் கோயில் ஊடாக யாழ்ப்பாணம் ஆகிய வீதிகளில் விசேட பஸ் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *