பிக்குகளின் காடைத்தனத்துக்கு எதிராக முல்லைத்தீவு மண்ணில் கிளர்ந்தெழுந்தது தமிழர் சேனை!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் முல்லைத்தீவு, செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமையைக் கண்டித்தும், உயிரிழந்த பிக்குவின் உடல் ஞானசாரர் தலைமையிலான பிக்குகளினால் தகனம் செய்யப்பட்டபோது நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி மற்றும் இளைஞர்கள் பிக்குகளினால் தள்ளிவீழ்த்தப்பட்டுத் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பிக்குகளின் அராஜகத்துக்குத் துணைபோன பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் முல்லைத்தீவில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் சட்டத்தரணிகள் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் போராட்டத்தில் பெருமளவான தமிழ் மக்கள் பங்கேற்று தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு பழைய வைத்தியசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் 11 மணியளவில் ஒன்றுகூடிய தமிழ் மக்கள், பேரணியாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்குச் சென்றனர்.

அங்கு இலங்கை அரசு மற்றும் ஐ.நாவுக்கான மகஜர்கள் மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று முல்லைத்தீவு நகரத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. பல இடங்களில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *