ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் தீர்மானிக்குக! – ரணிலுக்கு சஜித் கடிதம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் தீர்மானிக்குமாறு கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார் அக்கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ.

இந்தத் தகவலை அமைச்சர் சஜித் பிரேமதாஸவே வெளியிட்டுள்ளார். அம்பாந்தோட்டையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வீடமைப்புத் திட்டத்தைப் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் அறிவிக்குமாறு எமது கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

எனது பெயரை அறிவிப்பதில் ஏதேனும் சிக்கல் இருப்பின் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவையும், நாடாளுமன்றக் குழுவையும் கூட்டி ஏகமனதாக தீர்மானமொன்றை எடுக்குமாறும், அவ்வாறு முடியாவிட்டால் இரகசிய வாக்கெடுப்பை நடத்துமாறும் அக்கடிதத்தில் கோரியுள்ளேன்.

கடந்த காலங்களில் எனக்காக வாய்ப்புகளை நான் விட்டுக்கொடுத்தேன். தற்போது எனக்கால காலம் உதயமாகியுள்ளது. எனவே, முன்வைத்த காலை நான் பின்வைக்கமாட்டேன். ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *