ராஜபக்சவினர் போல் சர்வாதிகார வழியில் செல்லவேமாட்டோம்! – பிரதமர் ரணில் வாக்குறுதி

“சர்வாதிகாரத்தால் எதனையும் சாதிக்கலாம் என்று ராஜபக்சவினர் நம்புகின்றனர். ஆனால், சர்வாதிகாரத்தால் எந்த முன்னேற்றமும் கிடைக்கப் போவதில்லை. நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாதவர்களே சர்வாதிகாரப் பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள். நாம் அந்தப் பாதைக்கு ஒருபோதும் செல்லவேமாட்டோம்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தில் எமக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லாவிட்டாலும் ஜனநாயகத்தால் எதனையும் வெற்றிகொள்ள முடியும் என்பதை கடந்த நான்கரை வருடங்களில் நிரூபித்து காட்டியுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் பெறும் 3,300 குடும்பங்களுக்கு வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாடரங்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின்றி பல்வேறு பணிகளை எம்மால் முன்னெடுக்க முடியுமாக இருந்தால் பெரும்பான்மை கிடைத்தால் இதனைவிட பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் .

வெள்ளை வான் கலாசாரத்தினூடாக ஜனநாயக இலக்குகளை அடைய முடியாது. சகலருடனும் ஒற்றுமையாகச் செயற்படுவதினூடாகவே இலக்குகளை அடைந்துகொள்ள முடியும்.

கட்டட நிர்மாணங்களை மேற்கொண்டது போன்று மறுபுறம் ஜனநாயகத்தையும் படிப்படியாகக் கட்டியெழுப்பியுள்ளோம்.

கடந்த அரசால் இந்த அரசுக்கு அதிகளவான கடன் சுமையையே கொடுக்க முடிந்தது. சுமைகளின் மத்தியில் ஆட்சியைப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தாலும் சவால்களைப் பொருட்படுத்தாமல் சிறந்த வெற்றி இலக்குகளை அடைந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது” – என்றார்.

மாநகரங்கள் , மேற்கு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க , மனோ கணேசன் மற்றும் இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபூர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமச்சந்திர, எஸ்.எம். மரிக்கார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *