முடிவின்றி நீள்கிறது ஐ.தே.கவின் இழுபறி! – தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல் நிறைவுற்றது ரணில் – சஜித் பேச்சு

கொழும்பு அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு எந்த முடிவும் இல்லாது நேற்றிரவு நிறைவடைந்தது என அறியமுடிந்தது. அதனால் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை முடிவுக்கு வராது நீள்கின்றது.

ஆனால், இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என்று கூறினார். இன்னும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதான கட்சிகள் தமது வேட்பாளர்கள் யார் என்பதைப் பெயரிட்டு வருகின்றனர். மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பெயரிடப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி அமைத்துள்ள ‘தேசிய மக்கள் சக்தி’ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பேச்சில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

ஐ.தே.கவின் ஒரு தரப்பினர் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இன்னொரு தரப்பினர் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்று கோருகின்றனர். அதைவிடவும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்ற கருத்துக்களும் வெளிவந்துள்ளன.

ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை அறிவிப்பதில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க காலம் தாழ்த்தி வந்த நிலையில், சஜித் பிரேமதாஸ தனது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்திருந்தார். அதனால் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இந்தநிலையில், நேற்றிரவு ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையே சந்திப்பு ஏற்பாடுகியிருந்தது. இந்தச் சந்திப்பு அலரிமாளிகையில் நடைபெற்றது.

சந்திப்பில் இருவரும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினர் என்று அறியமுடிகின்றது. “ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் மட்டுமல்ல, இதர தோழமைக் கட்சிகளின் (சிறுபான்மைக் கட்சிகளின்) தலைவர்களுடனும் பேச்சு நடத்தி அதன்பின்னர் கட்சிக்குள்ளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வேட்பாளர் யார் என்பதை மத்திய செயற்குழுவே முடிவு செய்ய வேண்டும், அதற்கு முன்னர் தனிநபரை முன்னிலைப்படுத்திப் பிரசாரங்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல” என்று ரணில் விக்கிரமசிங்க சந்திப்பில் சுட்டிக்காட்டினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்தபின்னரே வேட்பாளரை அறிவிக்க முடியும் என்றும் ரணில் சுட்டிக்காட்டினார் என்றும் அறியமுடிந்தது.

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்னர் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உட்படப் பல விடயங்கள் தொடர்பாகக் கொள்கை வகுப்பட வேண்டும். வேட்பாளர் யார் இல்லை என்பதல்ல பிரச்சினை” என்றும் ரணில் கூறினார் என்றும் தெரியவந்தது.

“கட்சியிலுள்ள பெரும்பான்மையினர் ஜனாதிபதி வேட்பாளராக நான் களமிறங்குவதை விரும்புகின்றனர். அதனால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன” என்று சஜித் பிரேமதாஸ இதன்போது சுட்டிக்காட்டினார் என்றும் அறியமுடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *