சஜித் வாய் வீரன்தான்; செயல் வீரன் அல்லன்! – ஐ.தே.கவில் எவரும் தகுதியில்லை; இப்படிச் சொல்கின்றார் மஹிந்த

“சஜித் பிரேமதாஸ, தந்தையின் பெயரைப் பயன்படுத்தியே தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளார். அவர் செயலில் வீரன் அல்லன். வாய்ச்சொல்லில்தான் வீரன்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வதேச ஊடகத்தின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிப்பது இந்த நாட்டில் வாழும் மக்களேயன்றி சர்வதேச சமூகம் அல்ல. ஐக்கிய தேசியக் கட்சியைப் பல வெளிநாடுகள் இயக்குகின்றன. அதனால் அந்தக் கட்சி சின்னாபின்னமாக சிதறுண்டு காணப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பெரும்பாடு படுகின்றார். அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட அவருக்கும் ஆசை வந்துள்ளது. பல ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர் மீண்டும் போட்டியிடக் கனவு காண்பது வெட்கக் கேடான விடயம்.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராவதற்கு எந்தத் தகுதியும் அற்றவர். தந்தையின் பெயரைப் பயன்படுத்தித்தான் அவர் அரசியலுக்கு வந்தவர். தற்போதும், தந்தையின் பெயரைப் பயன்படுத்தியே தேர்தலில் களமிறங்க அவர் தீர்மானித்துள்ளார். அவர் செயலில் வீரன் அல்லன். வாய்ச்சொல்லில்தான் வீரன்.

அதேவேளை, கரு ஜயசூரியவும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் ஒருவர். கடந்த ஒக்டோபர் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளின் அழுத்தத்தின் பெயரில்தான் அவர் நாடாளுமன்றத்தில் நடுநிலையாகச் செயற்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாகவே அவர் செயற்படுகின்றார். சபாநாயகர் கதிரையில் அமர்வதற்குத் தகுதியற்ற அவர் ஜனாதிபதிக் கதிரைக்கு வருவது எப்படி நியாயம்?

ஒட்டுமொத்த ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்கு எவரும் தகுதியற்றவர்கள். இந்த நாட்டில் வாழும் மூவின மக்களும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபயவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *