இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது தற்கொலைக் குண்டுதாரியின் உடல்! – எதிர்ப்புத் தெரிவிப்பு மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டு. கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிஸார் புதைத்ததை எதிர்த்துப் பொதுமக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மயானத்தின் முன் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் கலைக்கப் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி – உயிர்த்த ஞாயிறு தினமன்று நாட்டில் பயங்கரவாதிகளால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. அதில் பொதுமக்கள் சுமார் 250 பேர் வரையில் உயிரிழந்தனர். இந்தநிலையில், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிதறிக் கிடந்த
தலை மற்றும் உடற்பாகங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த உடற்பாகங்கள் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய முகமட் ஆசாத் என்பவரது என்று டி.என்.டி பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இந்த உடற்பாகங்களைப் பொது மயானத்தில் அரச செலவில் புதைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபருக்கு நீதிமன்றம் உததரவிட்டது. இதனைக் கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி மட்டக்களப்பு புதூர் ஆலையடி மயானத்தில் புதைக்கப் பொலிஸார் முற்பட்டபோது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தமையையடுத்து அங்கு புதைப்பது கைவிடப்பட்டது.

தொடர்ந்து கள்ளியங்காடு மயானத்தில் புதைக்க முற்பட்டபோது பொதுமக்களின் ஆர்ப்பாட்டத்தால் அதுவும் கைவிடப்பட்ட நிலையில் காத்தான்குடிப் பிரதேசத்தில் புதைக்க முற்பட்டபோது அங்கும் மக்களின் ஆர்ப்பாட்டத்தால் அது கைவிடப்பட்டது.

இந்தநிலையில் தொடர்ந்தும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்தன.

நேற்று திங்கட்கிழமை மாலை மாலை கள்ளியங்காடு இந்துமயானத்தில் இந்த உடற்பாகங்களைப் பொலிஸார் இரகசியமான முறையில் புதைத்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதேச மக்களுக்குத் தெரியவந்ததையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை அந்த மயானத்துக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டனர் மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு வீதியில் அமர்ந்து அவர்கள் போராடினர்.

புதைக்கப்பட்ட உடற்பாகங்களை உடனடியாகத் தோண்டி எடுக்குமாறு கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் கலைக்கப் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை முன்னெடுத்தனர்.

இதேவேளை, தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகங்களை மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைப்பதற்கு மாநகர சபையிடம் அனுமதி பெறப்படவில்லை என்றும், மாநகர சபை அனுமதி வழங்கவில்லை என்றும் மாநகர மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், மாநகர ஆணையாளருக்கு முகவரியிட்டு கடிதம் ஒன்றை நேற்று மாலை தொலைநகலில் அனுப்பியிருந்தார். அப்போது நாங்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு வேறு பணிநிமித்தம் சென்றிருந்தோம். இந்த விடயம் எமக்குத் தெரியாது. இந்த விடயத்தை மாவட்ட அரச அதிபர் இரகசியமாக மேற்கொண்டுள்ளார் என்றே கூறவேண்டும். எமது அனுமதி பெறப்படாது இந்து அல்லாத ஒருவரின் உடற்பாகம் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டமைக்கான பொறுப்பை மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரே ஏற்க வேண்டும். இந்த இந்து மயானத்தில் இருந்து உடற்பாகங்களை உடனே அகற்ற வேண்டும் என்று நாளை அவருக்குக் கடிதம் அனுப்பப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *