ஐ.தே.கவுக்குள் பிடுங்குப்பாடு மேலும் உச்சம்! – சஜித் அணியினர் தனிவழிக்கும் தயார்

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் அறிவிக்கத் தவறினால், சஜித் ஆதரவு அணியைச் சேர்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனி வழியில் பயணிக்கத் தயாராக இருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தை பிரதமரின் கவனத்துக்கும் அவர்கள் கொண்டு சென்றுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

“எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவைப் பெயரிடாவிட்டால் அடுத்தகட்ட அதிரடியாக தனித்த பயணத்தை ஆரம்பிக்க கட்சியின் 57 உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்” என்று அந்தக் கட்சியின் உயர்மட்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த வாரமே சஜித் – கரு – ரணில் மூவரும் பேச்சு நடத்தவுள்ளதுடன் அடுத்த வாரத்துக்குள் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு கட்சியின் உயர்மட்டம் தீர்மானம் எடுத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து தொடர்ந்தும் இழுபறி நிலைமை உருவாகியுள்ளது. ஒரு மாத காலமாக பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும் கூட இந்தப் பிரச்சினையில் பொது இணக்கப்பாடு எட்டப்படுவதில் தொடர்ந்தும் இழுபறி நிலைமையே உள்ளது.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் சஜித் பிரேமதாஸ அணியினர் மாத்தறையில் மக்கள் கூட்டத்தை நடத்தி தமது பலத்தை மீண்டும் நிரூபித்திருந்த நிலையில் அன்றைய தினமே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் இராப்போசன விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இராப்போசன விருந்துக்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரும் மேலும் சில முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிகழ்வின் போதும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முக்கியமான சில விடயங்கள் கட்சியின் மேலிடத்தில் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பு அமைச்சர் சஜித் பிரேமாதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க முடியாதென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளனர். இந்தநிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் அணியினர் முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்று உயர்மட்ட அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *