முதலில் மலையகத்தை முன்னேற்றவேண்டுமாம்! – கோட்டா கூறுகின்றார்

“மலையக மக்களின் வீடு, கல்வி, தொழில் ஆகிய அத்தியவசிய தேவைகளில் தற்போதும் நிலவும் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்துக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். மலையகத்தை சிறந்த சுற்றுலா வலயமாக மேம்படுத்த வேண்டுமாயின் முதலில் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைய வேண்டும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபச்ச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இளையோர் இன்று தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள அரசையே நம்பியுள்ளார்கள். சுய தொழில் துறைகயை விருத்தி செய்து அதன் பக்கம் இளையோரைச் செல்வதற்கான திட்டங்களை அரசு செயற்படுத்தவில்லை. இதுவே தொழில் இன்மைக்கு பிரதான காரணியாகும்.

பாரம்பரியமான கல்வி முறைமைகளில் இருந்து மாற்றம் பெறுவது அவசியமாகும். இதற்காக தேசிய மரபுரிமைகளையும், கலாசாரத்தையும் விட்டுக் கொடுக்க முடியாது. பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளின் கல்வித்துறை அனைத்துத் துறைகளின் முன்னேற்றத்திற்கும் பெரிய பங்களிப்பை வழங்குகின்றது.

இன, மத மற்றும் பிரதேச வேறுப்பாடுகள் இன்றி அனைத்து இளைஞர்களின் தொழில் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்க சுயதொழில் திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். அரச தொழில்வாய்ப்புக்களின் உள்ள சலுகைகள் தனியார் துறையிலும் கிடைக்கப் பெற்றால் அரச தொழில்வாய்ப்புக்கள் மீதான கேள்வி குறைவடையும். முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதாரத்தில் முதுகெலும்பாக தேயிலை உற்பத்தி காணப்படுகின்றது. ஆனால், பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை நிலை இன்றும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மலையக மக்களின் தொழில், வீடு, கல்வி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டியது அரசியலுக்கு அப்பாற்பட்டதாகும்.

மலையகத்தை சிறந்த சுற்றுலா வலயமாக அறிமுகப்படுத்த வேண்டுமாயின் மலையக மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமடைய வேண்டும். இன்று மலையக இளைஞர்கள் தொழில்வாய்ப்புக்காக நகர் புறங்களுக்கு வந்து பல பிரச்சினைகளை எதிர்க்கொள்கின்றார்கள். மலையகத்தில் இருந்தேம் சிறந்த வருமானம் ஈட்டக்கூடிய சுய தொழில்கள் செயற்படுத்தப்படும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *