சவேந்திர சில்வாவின் நியமனம் ஐ.நா. செயலரும் கடும் அதிருப்தி! – தொடர்கின்றது பலமுனை அழுத்தம்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலை தருகின்றது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்டரெசின் சார்பில், அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எமது தரப்பில், இந்த நியமனம் குறித்து நாங்களும் கவலையடைகின்றோம்.

ஐ.நா. அமைதி காப்பு நடவடிக்கைகளில், நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களும், மிக உயர்ந்த மனித உரிமை தரங்களுக்கு அமைய இருக்க வேண்டும் என்ற விடயத்தில், ஐ.நா. உறுதியுடன் உள்ளது.

ஐ.நா. அமைதி காப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் அனைவரும் விரிவான மனித உரிமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்” – என்றார்.

ஐரோப்பிய ஒன்றியமும் எதிர்ப்பு

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டிருப்பதானது, தேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கையின் முயற்சிகளைக் குறைமதிப்புக்கு உட்படுத்தியுள்ளது எனவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் போரில் தப்பியவர்களுக்கு ஒரு கவலையான செய்தியை அனுப்பியுள்ளது எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐரோப்பியத் ஒன்றியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்த நியமனம் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதாக, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அளித்த வாக்குறுதியைக் கேள்விக்குட்படுத்துகின்றது.

மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக இருந்தபோதும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத் தளபதியாக நியமிப்பட்டமை குறித்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட தீவிரமான கவலைகளை நாங்கள் முழுமையாகப் பகிர்ந்து கொள்கின்றோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *