தமிழர் அபிலாஷை விடயத்தில் ஐ.தே.கவின் நிலைப்பாடு யாது? – யாழில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி

“எங்களுடைய தலைவிதியை நாங்களே தீர்மானிக்கின்ற ஆட்சி உரிமை எங்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த அரசுக்கு கடந்த நான்கு வருடங்களாக எங்கள் ஆதரவைக் கொடுத்தோம். ஆனால், அவ்வாறான தீர்வுக்குப் பல முயற்சிகள் நடந்த போதிலும் அதை முடிவுக்குக் கொண்டுவர முடியாத சூழ்நிலையே இங்கு இப்போது உள்ளது. உங்களை ஒரு பிரதமராக அல்லாமல் – ஜனாதிபதி வேட்பாளராக அல்லாமல் முக்கியமான கட்சித் தலைவர் என்ற முறையில் ஓர் கேள்வி கேட்க விரும்புகின்றோம். எங்களுடைய அரசியல் அபிலாஷைகளுக்கு உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? அதைத் தெளிவுபடுத்துவீர்களா?”

– இவ்வாறு யாழ். குருநகர் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“இன்றைய தினம் குருநகர் மண் பெருமிதத்தோடு பிரதம மந்திரியை வரவேற்று நிற்கின்றது. இதுகால வரைக்கும் ஒரு பிரதம மந்திரி இங்கு வந்ததில்லை. ஆனால், பிரதமராக ரணில் விக்கிரமசிங்க வந்திருக்கின்றார் என்று நீங்கள் பெருமிதம் கொள்கிறீர்கள். இங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டமாக அமைகின்றது.

இந்தப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்கின்றபோது அரசில் இவர்கள் இருந்தாலும்கூட, எதிர்க்கட்சியில் நாங்கள் இருக்கின்றபோது, எங்களுடன் கலந்தாலோசித்து, எங்களுடைய முன்மொழிவுகளைப் பெற்றுச் செய்வது இதில் உள்ள விசேட தன்மையாகும். முன்னைய காலத்தில் இது நடந்திருக்கவில்லை.

இன்றைக்குப் பிரதம மந்திரி இங்கே வந்திருக்கின்ற காலச் சூழ்நிலை நாட்டிலே ஒரு தலைவரைத் தெரிவு செய்கின்ற தேர்தலை அண்மித்த காலப் பகுதியாகக் கருதப்படுகின்றது. அதைக் குறித்துத்தான் பலருடைய கவனமும் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்று இன்னமும் அறிவிக்காத இந்தச் சந்தர்ப்பத்திலே, இன்றைக்குப் பிரதம மந்திரியை யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த விடயம் சம்பந்தமாகச் சில கருத்துக்களைச் சொல்வதற்கான கடைசிச் சந்தர்ப்பமாக இதை நான் கருதுகின்றேன்.

பொருளாதார நன்மைகள், பொருளாதாரத் திட்டங்கள் எங்களுடன் கலந்தாலோசித்து இப்போது நடைபெறுகின்றன என்று நான் சொன்னேன்.

ஆனால், இவற்றை நாங்களே தீர்மானித்து, நாங்களே அமுல்படுத்தக்கூடிய ஓர் ஆட்சி உரிமை எங்களுடைய கையிலே கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய அபிலாஷையாகத் தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றது.

எங்களுடைய தலைவிதியை நாங்களே நிர்ணயிக்கக்கூடிய விதத்திலே, எங்களுடைய அதிகாரம் எங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த அபிலாஷையாக இருந்து வந்திருக்கின்றது.

நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திலே கடந்த நான்கு வருடங்கள் செயற்பட்டபோது பொருளாதார நன்மை எங்களுக்கு இப்படியாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆதரவு கொடுக்கவில்லை. மாறாக, எங்களுடைய நீண்ட கால அரசியல் அபிலாஷைகளுக்கு ஒரு தீர்வு கிட்டுவதற்குச் சந்தர்ப்பமாகக் கருதித்தான் இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவைக் கொடுத்தோம்.

இந்த நாட்டினுடைய தலைவராவதற்குப் பலர் இப்போது முன்வந்திருக்கின்றார்கள். அவர்கள் இலங்கையை ஒரு நாடாக வைத்திருக்கவும், இலங்கையினுடைய இறைமையைப் பாதுகாப்போம் என்றும் பல வாக்குறுதிகளைக் கொடுத்தவர்களாக – பெரும்பான்மை மக்களுடைய வாக்குகளைப் பெறுவதற்கான பல பேச்சுக்களிலே இன்றைக்கு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்து உங்களிடம் இன்றைக்கு உங்களை ஒரு கட்சித் தலைவராக ஒரு விடயத்தைக் கேட்க விரும்புகிறோம். பிரதம மந்திரியாக அல்ல, ஜனாபதி வேட்பாளராக அல்ல, ஒரு முக்கிய கட்சித் தலைவராக உங்களிடத்தே நாங்கள் கேட்க இருப்பது எங்களுடைய அரசியல் அபிலாஷை குறித்து உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

ஏனென்றால் கடந்த நான்கு வருடங்களாக நாங்கள் ஆதரவு தந்தும், நீங்கள் தலைமை தாங்கி, (உங்கள் தலைமையின் கீழ்) புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான பல படிமுறைகள் நடந்திருந்தும், அதை இறுதி செய்ய முடியாமல் – அதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முடியாத சூழ்நிலையிலே இன்றைக்கு நாங்கள் நின்று கொண்டிருக்கின்றோம்.

இந்த அந்தரத்திலே நாங்கள் நின்று கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே எங்களுடைய மக்களுக்குத் தீர்மானமாக உங்களுடைய கட்சியின் நிலைப்பாட்டை நீங்கள் அறிவிக்க வேண்டும். எங்களுடைய தாழ்மையான வேண்டுகோளாக இந்த வேளையிலே நாங்கள் இதனை முன்வைக்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *