தமிழ் மக்களின் ஆதரவின்றி கோட்டாபய வெல்லமுடியாது! – உறுதியுடன் கூறுகின்றார் சுமந்திரன் எம்.பி.

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு இன்றி கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற முடியாது. இதனால்தான், அவர் தனது முன்னைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களின் ஆதரவு இன்றி வெல்லுவேன் என்று கோட்டாபய ராஜபக்ச கூறியதாக செய்திகள் வந்தன. அதன் பின்னர், தான் அவ்வாறு சொல்லவில்லை என்று கூறினார். அவர் அப்படிக் கூறினாரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவேற்றுவேன் என்று தனது நேற்றைய (நேற்றுமுன்தினம்) உரையில் கோட்டாபய சொல்லியிருக்கின்றார். தமிழ் மக்களின் ஆதரவு இன்றி நிச்சயம் வெல்ல முடியாது என்பதால்தான், முதலில் அப்படிக் கூறியிருந்தாலும் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

கேள்வி:- ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக சஜித் பிரேமதாஸ, கரு ஜயசூரிய இருவரில் யார் போட்டியிட்டால், கோட்டாபய ராஜபக்சவை எதிர்த்து வெற்றிபெறுவார் என்று நினைக்கின்றீர்கள்?

பதில்:- ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களைத் தீர்மானிப்பது அது உட்கட்சி விவகாரம். இதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது. அதில் தாக்கம் செலுத்தும்படியான கருத்துக்களை நாங்கள் தெரிவிக்க முடியாது.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோட்டாபய ராஜபக்சவை ஆதரிப்பார்களா?

பதில்:- நாங்கள் யாரை ஆதரிப்பது? யாரை ஆதரிக்காமல் விடுவது? யாரையும் ஆதரிப்பதா? என்ற எந்தத் தீர்மானமும் இன்னும் எடுக்கவில்லை.

கேள்வி:- அவ்வாறென்றால் மஹிந்த அரசு வந்து விடக் கூடாது என்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசைக் கொண்டு வந்ததாக நீங்கள் பகிரங்கமாக அறிவித்திருந்தீர்கள். மஹிந்த சார்பான ஒருவரான கோட்டாபய ராஜபக்சவை ஆரதரிக்க முடியுமா? இல்லையா? என்று தற்போது அழுத்தம் திருத்தமாக தெரிவிக்க முடியாதா?

பதில்:- அழுத்தம் திருத்தமாக நாங்கள் சரியான நேரத்தில் சரியான ஒரு கருத்தை வெளியிடுவோம். அதற்கான நேரம் இப்போதில்லை.

கேள்வி:- உங்களது கோரிக்கைகளுக்கு கோட்டாபய ராஜபக்ச ஆதரவளித்தால் எத்தகைய நிலைப்பாடு எடுப்பீர்கள்?

பதில்:- நான் ஏற்கனவே சொன்னதைப் போன்று ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்ற தீர்மானங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவிக்கட்டும். எல்லாக் கட்சிகளும் தங்களின் கொள்கைகளை முன்வைக்கட்டும். நாங்கள் அனைத்து கட்சி வேட்பாளர்களுடனும் பேசுவோம். அதன் பின்னர் நிதானமான ஒரு முடிவை எடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *