எவருக்கும் அஞ்சவேமாட்டேன்! நவம்பரில் நிச்சயம் வருவேன்!! – பதுளையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் சஜித் சூளுரை

“நான் எவருக்கும் பயந்தவன் அல்லன். மக்களுக்காக இந்த நிமிடம் மரணிக்கவும் நான் தயார். தந்தையின் வழியில் நான் எதிர்வரும் நவம்பர் மாதம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்வேன். தந்தைபோல் நாட்டுக்காக நடுவீதியில் உயிரைத் தியாகம் செய்யவும் தயார்.”

 
– இவ்வாறு சூளுரைத்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுபவருமான அமைச்சர் சஜித் பிரேமதாஸ.
 
சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து பதுளையில் இன்று மாலை ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
 
“உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து நடுத்தர கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும்போது பொருளாதாரம் மேம்படும்.
 
இளைஞர்களைக் கொண்டு நாட்டை முன்னேற்ற வேண்டும். இளைஞர்களின் எண்ணங்களுக்கும் இலட்சியத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும். புதிய தொழிநுட்பத்துடன் நாங்கள் உலகை வெல்லவேண்டும்.
 
நாட்டை நிர்வகிக்கும்போது சரியான தேசிய கொள்கை வேண்டும். நாட்டை கைத்தொழில் யுகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரத்தை விருத்தி செய்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அதேபோல் கல்வி, சுகாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்.
 
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இராணுவ மட்டுமல்ல பொருளாதார, சமூக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு – புலனாய்வுத்துறை மேம்படுத்தப்பட வேண்டும். மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும்.
 
தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினை குறித்து கவனிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தோட்டத் தொழிலாளர்கள் சொற்பளவு வருமானத்துடனேயே வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வில் வறுமை தாண்டவமாடினாலும், தனியார் கம்பனிகள் அதிக இலாபம் பெறுகின்றன. எனவே, தோட்டத் தொழிலாளர்களை நாம் அரவணைப்போம் – பாதுகாப்போம்.
 
ரணசிங்க பிரேமதாஸவே இலட்சக்கணக்கான மலையக மக்களுக்கு நிலவுரிமையை வழங்கினார்.
 
தீவிரவாதத்துக்கு இந்நாட்டில் இடமில்லை. தீவிரவாதிகள் முற்றாக ஒழிக்கப்படுவர். இவற்றை உருவாக்குபவர் யார்? அவை எப்படி உருவாகின்றன? என்பதைப் பார்க்க வேண்டும்.
 
நாட்டின் இறையாண்மையை நாங்கள் பாதுகாப்போம். நாட்டைப் பிரிக்க எந்தச் சக்திக்கும் இடமளிக்கமாட்டோம். இன, மத பேதமற்று செயற்பட்டு புதிய இலங்கையை உருவாக்குவோம். வெளிநாட்டு சக்திகளுடன் ஒப்பந்தம் செய்யும்போது நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படும் எதிலும் கையொப்பமிடமாட்டோம்.
 
நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பதை பத்து தர்மங்கள் அடிப்படையில் நாங்கள் மேற்கொள்வோம். நாங்கள் பலவீனமானவர்கள் அல்லர். நான் எவருக்கும் பயந்தவன் அல்லன். மக்களுக்காக இந்த நிமிடம் மரணிக்கவும் நான் தயார். தந்தையின் வழியில் நான் எதிர்வரும் நவம்பர் மாதம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்வேன். தந்தை போல் நாட்டுக்காக நடுவீதியில் உயிரைத் தியாகம் செய்யவும் தயார். நான் இரட்டை நாக்கு அரசியல்வாதி அல்லன். சொல்வதைக் கட்டாயம் செய்து முடிப்பேன்” – என்றார்.
 
இந்நிகழ்வில் சஜித்துக்கு ஆதரவான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பௌத்த பிக்குகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *