புதிய அரசமைப்பே நாட்டுக்குத் தேவை! – ஜனாதிபதித் தேர்தல் அல்ல என்கிறார் சம்பந்தன்

“நாட்டுக்கு தற்போது அவசரமாகத் தேவைப்படுவது புதிய அரசமைப்பே தவிர, ஜனாதிபதித் தேர்தல் அல்ல.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு கொள்கை அதிகாரி ரிக்கார்டோ செலரி மற்றும் அரசியல் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல்களுக்கான பிரதித் தலைவர் ஆன் வாகியர் சட்டர்ஜி தலைமையிலான குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது குறித்த உறுப்பினர்களுக்கு நாட்டின் நிலவரம் தொடர்பாகத் தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன்,

“1994ஆம் ஆண்டிலிருந்து நாட்டு மக்கள் தொடர்ச்சியாக 25 வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவாகவே தேர்தல்களில் தீர்ப்பளித்திருக்கின்றார்கள். இந்தப் பின்னணியில் இன்னுமொரு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதானது மக்கள் ஆணையை மீறுகின்ற ஒரு கபடச் செயலாகும்.

எனவே, தற்போது ஆராயப்பட வேண்டிய விடயம் யாதெனில், மக்கள் ஆணையை மீறுகின்ற இந்த நடவடிக்கையிலே பங்குபெறுவதா என்பதும் மேற்குறிப்பிட்ட பின்னணியில் தேர்தல் நடைமுறையானது நியாயபூர்வமானதா என்பதுமேயாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 90 வீதத்துக்கும் அதிகமான மக்கள் ஒரு புதிய அரசமைப்புக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். அதன் விளைவாக நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு புதிய அரசமைப்புக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், தற்போது அவை அனைத்தும் கிடப்பிலே போடப்பட்டுள்ளது.

1988ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்துக்குப் பிற்பாடு கடந்த 30 வருடங்களாக புதிய அரசமைப்பு தொடர்பாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக பல்வேறு தீர்வுத் திட்டங்கள் முன்மொழியப்பட்டன. ஆனால், அவற்றுள் எதுவும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

எனவே, தற்போது நாட்டுக்கு முக்கிய தேவையாக உள்ளது ஒரு ஜனாதிபதித் தேர்தல் அல்ல மாறாக ஒரு புதிய அரசமைப்பே ஆகும்” – என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *