தமிழர்களின் ஆதரவு ஏதுமின்றியே வெல்வதில் கோட்டாபய நம்பிக்கை! – ஆனால் 3 இலட்சம் தமிழ் வாக்குகள் மீதும் இலக்கு

* புதிய அரசமைப்பு என்பதே கிடையாது
* 13ஆவது திருத்தமே நடைமுறைக்கு
* கூட்டமைப்பை சந்திக்க விருப்பம்
* அரசியல் விடயங்களை மஹிந்த பார்த்துக்கொள்வார்
* பொலிஸ் அதிகாரத்தைக் கொஞ்சம் வழங்கினாலும் காணி அதிகாரம் இல்லவே இல்லை

தமிழர்களின் ஆதரவு இன்றிச் சிங்கள மக்களின் வாக்குகள் மூலம் மட்டுமே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெறுவார் என்று திடமாக நம்புகின்றார் மஹிந்த தரப்பு ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடியவர் என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ச.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் ஆதரவு தேவையில்லை என்றபோதும் தமிழர்களின் கணிசமான வாக்குகள் கிடைக்காமல்போனால் அது சர்வதேச அரங்கில் ஜனாதிபதியாகத் தனக்குரிய அங்கீகாரத்தை மதிப்பிறக்கம் செய்யும் என்று அவர் கருதுவதனால் சுமார் 3 இலட்சம் தமிழ் வாக்குகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதிலும் அவர் குறியாக இருக்கின்றார் என்று தெரிகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச நிறுத்தப்படலாம் என்கிற எதிர்வுகூறல்களுக்கு மத்தியில் தனது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதத்தில் பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்து வருகின்றார். தமிழ் அரசியல் தரப்பினருடனும் அவர் பேச்சுக்களை நடத்தி வருகின்றார். தமது அணியுடன் ஏற்கனவே இணைந்துள்ள சில தமிழ்த் தரப்புக்களுடன் அவர் ஏற்கனவே சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.

அந்தச் சந்திப்புக்களில் தான் வெற்றிபெற்றால் தீர்வு தொடர்பில் தன்னிடமிருந்து தமிழ் மக்கள் பெரியளவில் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று தெரிகின்றது. அத்தோடு பொருளாதார அபிவிருத்தியை வேகப்படுத்துவதன் மூலம் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுவிட முடியும் என்கிற தனது எதிர்பார்ப்பையும் அவர் இந்தச் சந்திப்புக்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த விடயங்கள் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கும் அவர் விரும்பம் கொண்டிருக்கின்றார்.

இதற்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தனை அவர் சந்தித்துப் பேசியிருக்கின்றார். கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சந்திப்பு நடந்தது. சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் வரவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் நீண்ட உரையாடல் இடம்பெற்றது.

கோட்டாபயவுடனான இந்தச் சந்திப்பை தனித்துவமான ஒன்றாக நோக்கவேண்டியதில்லை என்று கூறினார் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்.

கோட்டாபயவுடனான சந்திப்பு என்பது புதியதொரு விடயமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

போர்க் காலங்களில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய பதவி வகித்த காலத்தில் இராணுவத் துணைப்படையாக இயங்கி வந்த புளொட் அமைப்பின் தலைவர் என்கிற வகையில் கோட்டாபயவைச் சந்திப்பது அவ்வப்போது நடக்கக்கூடிய விடயமாக இருந்ததைப் பின்னணியாகக் கொண்டு அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனையும் கோட்டாபயவையும் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார் என்பதை இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டிய கோட்டாபாய, தான் வெற்றி பெறுவதற்குத் தேவையான அந்த வாக்குகளை சிங்களவர்களிடமிருந்தே திரட்டிவிட முடியும் என்பதை முழு நம்பிக்கையோடு வெளிப்படுத்தியிருக்கின் ர்.

தமிழ் மக்களின் வாக்குகள் தனது வெற்றிக்கு அவசியமில்லை என்பதைச் சுட்டிகாட்டிய அதேவேளை, தமிழர்களின் வாக்குகள் இல்லாமல் தான் ஜனாதிபதியானால் அது சர்வதேச மட்டத்தில் தனக்குரிய அங்கீகாரத்தை மதிப்பிறக்கம் செய்யக்கூடும் என்று கருதுவதனால் தமிழர்களிடம் இருந்து சுமார் மூன்று இலட்சம் வாக்குகளையாவது திரட்டுவதற்கு அவர் எதிர்பார்த்திருக்கிறார் என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்.

தமிழ் மக்கள் தன்னை ஏற்றுக்கொள்ளாததற்கான காரணங்களை அறிவதில் இந்தச் சந்திப்பில் அவர் அக்கறை காட்டியிருக்கிறார் என்பதையும் அறியமுடிந்தது.

இலங்கை முழுவதிலிருந்தும் தனக்கு வாக்குகள் கிடைக்கப் பெற்றால்தான் சர்வதேச சமூகம் இலங்கையின் ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளும் என்றும் கோட்டாபய இந்தச் சந்திப்பில் தெரிவித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழர் பகுதிகளில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 80 சதவீதமான மக்கள் வாக்களித்திருந்தாலும் இப்போது அதே எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிப்பது சந்தேகம் என்றும், தமிழ் மக்கள் சிங்களத் தலைவர்கள் எல்லோரிலுமே நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்கிற உண்மையைத் தான் கோட்டாபயவுக்கு எடுத்துரைத்தார் என்றும் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தான் பதவிக்கு வந்தால் புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படாது என்பதைக் கோட்டாபய இந்தச் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

13ஆவது திருத்தத்தில் பல விடயங்கள் இருக்கின்றன எனவும், அவற்றை நடைமுறைப்படுத்தினாலே பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

13ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள பொலிஸ் அதிகாரங்களையும் முழுமையாக வழங்க முடியாதபோதும் எஞ்சியவற்றை வழங்குவதில் தனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று தெரிவித்த அவர், ஆனால் காணி அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றார்.

காணி அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என்பதில் கோட்டாபய உறுதியாக இருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. அதற்கு அவர் கடந்த காலத்தில் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் பெரிய முதலீடு ஒன்றைத் தடுத்ததை உதாரணமாகச் சுட்டிக்காட்டினார் எனவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

மேலும், அரசியல் விடயங்களை எம்.ஆர். (மஹிந்த ராஜபக்ச) பார்த்துக் கொள்ளுவார் என்று கோட்டாபய தனது சந்திப்பில் கூறியதாக சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழர்கள் முக்கிய அமைச்சர்களாக வேண்டும் என்றும் முஸ்லிம்கள் அமைச்சுப் பதவிகளை எடுத்து வேகமாக வளர்ந்து இருப்பதைப் போன்று தமிழ் அரசியல்வாதிகளும் அமைச்சர்களாகி தமிழ் மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கூறினார்.

தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கோட்டாபய கருத்தறிய முயன்றபோது, அது குறித்து தலைவர் சம்பந்தனுடன்தான் பேசவேண்டும் என்று தான் குறிப்பிட்டார் என்றும், அதற்குத் தான் தயாராக இருக்கின்றார் என்று தெரிவித்த கோட்டாபய, சம்பந்தன் தன்னைச் சந்திப்பாரா என்று கேள்வி எழுப்பினார் என்றும் சித்தார்த்தன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *