ஆட்சி மாற்றத்தின் பின் தமிழருக்குத் தீர்வு உறுதி! – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த

“ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் உட்பட அனைத்துத் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அத்தியாசியப் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு முன்வைக்கப்படும். தமிழ் மக்கள் மத்தியில் போலியான வாக்குறுதிகள் வழங்குவதை அனைத்து அரசியல் கட்சிகளும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் அரசியல்வாதிகளுடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார் எனக் கூறப்படுகின்றது.

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே நேற்று சந்திப்பு ஒன்று நடந்துள்ளது. கொழும்பு 07, விஜயராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன், டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண, ராஜா கொல்லூரே, அருண் தம்பிமுத்து, ரி.சிறீதரன், பி.உதயராசா, வரதராஜப் பெருமாள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானாந்தாவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபா கணேசனும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்கள் மத்தியில் போலியான வாக்குறுதிகள் வழங்குவதை அனைத்து அரசியல் கட்சிகளும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் உட்பட அனைத்துத் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அத்தியாசியப் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நடப்பு அரசு தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. இதுவரையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

வேலைவாய்ப்புப் பிரச்சினை, குடிதண்ணீர் பிரச்சினை, உற்பத்திப் பொருள்களுக்குச் சரியான விலை கிடைக்காமை போன்ற பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

வெற்றி இலக்கை மாத்திரம் இலக்காகக் கொண்டு தமிழ் மக்களிடம் போலியான வாக்குறுதிகளை வழங்குவதை அனைத்து அரசியல்வாதிகளும் முதலில் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்” – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *