இலங்கையில் 50 திரையரங்குகளில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எதிர்வரும் 8ஆம்திகதி இப்படம் உலகெங்கும் திரையிடப்பட இருக்கின்றது. இதன் இலங்கைக்கான விநியோக உரிமையை ஐஸ்வரியா நிறுவத்தின் சஜிவ் தனபாலசிங்கம் பெற்றுக்கொண்டுள்ளார். இப்படம் இலங்கை முழுவதுமாக 50 திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

இந்திய ஹிந்தி திரையுலகில் (பொலிவுட்டில்) சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தைத் தயாரித்துள்ளார் போனி கபூர். இதனைத் தமிழில் வினோத் இயக்கியிருக்கின்றார். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘அகலாதே…’ என்ற பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடியிருக்கின்றார். பா.விஜய் பாடல் வரிகளை எழுத யுவனுடன் இணைந்து பிரித்வி பாடியிருக்கின்றார்.

இந்தப் பாடல் கணவன் – மனைவிக்கு இடையேயான பாசம், காதல் மற்றும் புரிதலை விளக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

“ஒரு நொடிகூட என்னை விட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும். என் வாழ்வில், நடுவில் வந்த உறவு என்றாலும் நெடுந்தூரம் வருபவள் நீதான். என் குறைகள் நூறை மறந்து, எனக்காக தன்னை அர்பணித்தவள்” என்று கணவன் மனைவியைப் புகழும் விதத்தில் பாடல் வரிகளை அமைத்திருக்கின்றார் பா.விஜய்.

இந்தப் பாடல் வரிகளுக்கு மனதை மயக்கும் விதத்தில் இசையமைத்திருக்கின்றார் யுவன் சங்கர் ராஜா. அவருக்கே உரிய பாணியில் இந்தப் பாடலைப் பாடியிருக்கின்றார். மெலோடி பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றார் யுவன்.

அத்தோடு காட்சிக்குக் காட்சி விறுவிறுப்புகளைத் தரும் வகையில் கதையோட்டம் அமர்க்களப்படுத்துகின்றது. அஜித், வித்தியாபாலன் இருவரும் நடிப்பில் தத்தமது முத்திரைகளைப் பதித்துள்ளனர்.

இலங்கை வாழ் அஜித் இரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் கொழும்பில் ரூபி – மாளிகாவத்தை, ஈரோஸ் – பாமன்கடை, சினிசிட்டி- மருதானை, கொன்கொட் – தெஹிவளை, சக்ஸன் – கொள்ளுப்பிட்டி, எம்.சி. கொழும்பு, கெட்பிட்டல்- கொழும்பு, சமந்தா – தெமட்டகொடை, சவோய் – வெள்ளவத்தை, லிடோ – பொரளை, சினிசிட்டா – கல்கிஸை, சவோய் – இராஜகிரிய, லிபேட்டி – கொள்ளுப்பிட்டி ஆகிய திரையரங்குகளிலும், வடக்கில் எம்.சி – யாழ்ப்பாணம், ராஜா – யாழ்ப்பாணம், பாலா – சாவகச்சேரி, எஸ்.எஸ். – பருத்தித்துறை, செல்வா – யாழ்ப்பாணம், வசந்த் – வவுனியா போன்ற திரையரங்குகளிலும், கிழக்கில் விஜயா – மட்டக்களப்பு, சுகந்தி – மட்டக்களப்பு, ஜி.கே. – கல்முனை, சரஸ்வதி – திருமலை, கீபீஸ் – மாங்காடு, அர்ச்சன – அக்கரைப்பற்று ஆகிய திரையரங்குகளிலும், மலையகத்தில் றீகல் – நுவரேலியா, விஜிதா – ஹட்டன், சந்தியா – கம்பளை, டினுஜா – நாவலப்பிட்டிய, சினில்மா – பதுளை மற்றும் ஈ.டி.சி – கெக்கிறாவை, றுகோ – கட்டுநாயக்க போன்ற பல்வேறு திரையரங்குகளில் ‘நேர்கொண்ட பார்வை’ வெளியிடப்படவுள்ளது என ஐஸ்வரியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *