ரூ.50 விடயத்தில் தொடர்கின்றது அரசியல் நாடகம்! – அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து திகா வெளிநடப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையுடன் 50 ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுதியளித்திருந்தாலும் அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இந்தநிலையில், இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் 50 ரூபா விவகாரம் கலந்துரையாடப்பட்டாலும் சாதகமான முடிவு எட்டப்படவில்லை.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

சமகால விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட பின்னர் – 50 ரூபா கொடுப்பனவை வழங்குவது தொடர்பான விசேட அமைச்சரவைப் பத்திரத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார்.

எனினும், இதற்கான நிதி ஒதுக்கீட்டை தமது அமைச்சிலிருந்து ஒதுக்கீடு செய்வதற்குப் பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

இதையடுத்து மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ப.திகாம்பரம், நவீன் திஸாநாயக்கவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

“50 ரூபா விவகாரத்துக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டணி தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடமாட்டோம்” எனக் கூறிவிட்டு அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து திகாம்பரம் வெளிநடப்புச் செய்தார்.

“ஜே.வி.பியால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டபோதே இந்தப் பிரச்சினைக்கு முடிவு கண்டிருக்கலாம். ஆனால், 50 ரூபாவை வைத்துத் தொடர்ந்தும் அரசியல் நடத்தப்படுகின்றது. இன்றுகூட நடந்த வெளிநடப்பு அரசியல் நாடகமாகவே இருக்கும். அது தொழிலாளர்களின் நன்மை கருதியதாக இருக்காது” – என்று தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *