வடக்கு, கிழக்கு மக்களுக்கான மாகாணசபை முறைமையை ஒழித்துவிட்டது கூட்டமைப்பு! – இதற்குச் சுமந்திரனே பொறுப்பு என்கிறார் மஹிந்த

“வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாதொழித்துவிட்டது. இதற்கான முழுப்பொறுப்பையும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போது கிழக்கு மாகாண சபையும் இல்லை. வடக்கு மாகாண சபையும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசுடன் இணைந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அநியாயத்தை செய்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்ததென்பதனை இவர்களால் கூற முடியுமா?”

– இவ்வாறு கேள்வி எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் புதிய அரசமைப்புத் தொடர்பான விவாதம் பொருத்தம் இல்லை. ஒரு சில மாதங்களுக்குள் அரசமைப்பைத் திருத்த முடியுமா?. அவ்வாறானதொரு திருத்தத்துக்கு நாம் ஆதரவளிக்கவும் போவதில்லை. அரசமைப்பைத் திருத்த வேண்டுமானால் மக்கள் கருத்துக்கணிப்புக்கு போக வேண்டுமெனக் கூறினோம். ஆனால், அதனை நிராகரித்தனர். மக்கள் கருத்தைக் கேட்காது திருத்தம் செய்ய முடியாது. அரசமைப்புத் திருத்தம் என்ற பெயரில் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.

நாங்கள் தேர்தல் பரப்புரையின்போது மக்களின் கருத்துடன் அரசமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றே தெரிவித்தோம். ஆனால், புதிய அரசமைப்பு கொண்டு வருவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசு 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, அதனுடன் அரசமைப்புத் திருத்தத்தை கைவிட்டது.

13 பிளசுக்கு (13ஆவது திருத்தத்துக்கு மேல்) நான் இணங்கினேன். அதில் நாட்டை பிளவுபடுத்தும் திட்டம் இல்லை. ஆனால் இவர்கள் கொண்டுவர இருந்த திருத்தத்தின்படி, புதிய நாடுகள் உருவாகும் ஆபத்துக்கள் இருந்தன. மாகாணங்கள் பிரியும் நிலமைகள் இருந்தன. அடுத்துவரும் எமது ஆட்சியில் நாம் மக்களின் கருத்துக்கணிப்புக்கு விட்டு அதன் அடிப்படையில் புதிய அரசமைப்பை உருவாக்குவோம்.

வடக்கு மக்களுக்கு எமது ஆட்சியில் அனைத்து அபிவிருத்திகளையும் பெற்றுக்கொடுத்தோம். ஆனால் இந்த ஆட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஒரு மதகையேனும் வடக்கில் அமைக்க முடிந்ததா? தமிழ் மக்களை வறுமையில் வைத்துக்கொண்டு தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு. நாம் தமிழ் மக்களை வாழ வைத்தோம். முதலில் உரிமைகளை பெறுவோம் பின்னர் அபிவிருத்தி பற்றிப்பேசுவோம் என்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு கூறுகின்றனர். ஆனால், இவர்களால் தமிழ் மக்களுக்கு விடுதலையும் இல்லை. உரிமையும் இல்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *