வெற்றியுடன் விடைபெற்ற மலிங்கவுக்கு வாழ்த்துகள்!

பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்களினால் வெற்றிபெற்றதுடன் லசித் மலிங்க தனது 15 வருடகால சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றுள்ளார்.

இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடன் விளையாடி வருகின்றது.

நேற்று கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களைக் குவித்தது.

315 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 41.4 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 91 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

நேற்றைய போட்டியில் லசித் மலிங்க 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்த வெற்றியுடன் லசித் மலிங்க தனது 15 வருடகால சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றுள்ளார்.

2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் கால்பதித்த லசித் மலிங்க இதுவரை 329 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 536 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் நேற்று கொழும்பு, ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்துக்கு நேரில் வந்து மலிங்கவின் இறுதி ஆட்டத்தைப் பார்வையிட்டதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

அத்துடன், மலிங்கவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நினைவுக் கேடயத்தை வழங்கிவைத்தார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *